குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிய குர்திஸ்கள் சுதந்திர கோரிக்கையை கைவிட வேண்டும் அல்லது பட்டினியில் கிடக்க வேண்டுமென துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். சுதந்திர பிரகடனம் குறித்த வாக்கெடுப்பினை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எதிர்ப்பினை யும் மீறி பிராந்திய குர்திஸ் அரசாங்கம் வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் விநியோகத்தை துண்டிக்கப் போவதாகவும், போக்குவரத்து வழிகளை முடக்கப் போவதாகவும் முன்னதாக குர்திஸ்களுக்கு துருக்கி ஜனாதிபதி எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கிய எல்லைப் பகுதியில் சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்வதானது துருக்கி வாழ் குர்திஸ்களிடையேயும் பிரிவினைவாதத்தை தூண்டும் எனவும் எர்டோகன் அச்சம் வெளியிட்டுள்ளார். குதிர்திஸ்களின் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை, எனினும், சுதந்திரப் பிரகடனத்தை ஆதரித்தே வாக்களிக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது.