இணைப்பு 2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, இன்றயைதினம் தீர்ப்பளித்துள்ளது.
இதில், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதி மேற்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை, நிரூபிக்க முடியவில்லை எனக் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை மாணவி கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் உப காவற்துறை பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகியோர் செயற்பட்டமை தொடர்பில் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்த செயற்பாடானாது சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதெனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கானது ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்த நிலையில், தலைமை நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தனது தீர்ப்பை அறிவித்துள்ளார். அவரது முடிவையே தானும் ஏற்பதாக நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, 345 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் தற்போது வாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று – கண்ணீருடன் தாய் – காவல்துறையினர் குவிப்பு:-
Sep 27, 2017 @ 05:11
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் தீர்ப்பு, இன்று வழங்கப்படவுள்ள நிலையில், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவல்துறையினருக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் நிறுத்தப்பட்டுள்ளனக். சந்தேகநபர்கள் அனைவரும், கடுமையான பாதுகாப்பு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்டுள்ளனர். மேலும் தீர்ப்பு இன்றைதினம் வழங்கப்படவுள்ளமையால், நீதிமன்றத்தின் வளாகத்தில் பெருந்திரளான மக்கள் குழுமியிருக்கின்றனர். இந்த வழக்கு, ‘ட்ரயல் அட் பார்’ முறையில், யாழ். மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் கொண்ட தீர்பாய குழுவினாலேயே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் தாய் யாழ். மேல்நீதிமன்றிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்று வழங்கப்பட உள்ள தீர்ப்பு தனது மகளின் கொலைக்கான நீதியாக மட்டும் அன்றி, எந்த தாயும் இவ்வாறான சூழலை எதிர்கொள்ளாத வகையில் அமைய வேண்டும் என கோரியிருந்தார். அத்தகைய எதிர்பார்ப்புடன் தனது மகளின் படுகொலைக்கு நீதியை எதிர்பார்த்து, மாணவியின் தாய் கண்ணீருடன் மன்றிற்கு சமூகமளித்துள்ளார்.