207
Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அடிப்படையான விடயங்களில் முரண்பாட்டையும், அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களில் ஆழமான விவாதங்களுக்கான தேவையையும் அது உள்ளடக்கியிருக்கின்றது.
முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போரட்டத்தின் மீதான வெற்றிவாத அரசியல் போக்கே,நாட்டுக்குப் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச அந்த வெற்றிவாதத்தையும், இனவாதத்தையும் தனது அரசியலுக்குரிய முற்று முழுதான முதலீடாகக் கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தார்.
விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியாகத் தோற்கடித்து அடையப்பட்ட இராணுவ வெற்றியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மோசமான முப்பது வருட கால யுத்தத்திற்கு முடிவுகண்ட மக்களுடைய வெற்றியாகக் கருதவில்லை. மாறாக,அதனைத் தனி மனித வெற்றியாகவும், அந்த வெற்றியையே தனது குடும்பம் சார்ந்த ஊழல்களுக்கான அரசியல் பலமாகவும் பயன்படுத்தத் துணிவு கொண்டதன் விளைவாகவே நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தையொட்டி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான சூழலும் உருவாகியது.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பது தமிழ் மக்களினதும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் நீண்ட கால தேவையாகும். ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணை புரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்த அரசியல் தேவையையும் உள்ளடக்கி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது.
மூன்று முக்கிய நோக்கங்கள்
எதிரும் புதிருமான அரசியல் போக்குடன்; இரு துருவங்களாகத் திகழ்ந்த நாட்டின் இருபெரும் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் வெற்றிவாத நாயகனாகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவின் எதேச்சதிகார அரசியல் போக்கிற்கு முடிவு கட்டுவதற்காக ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றியடைந்தன.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இரு பெரும் அரசியல் கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கின. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களும், முஸ்லிம் கட்சிகளின் ஊடாக முஸ்லிம்களும் பேராதரவு வழங்கியிருந்தார்கள்.
ஜனநாயகத்தை ந்pலைநாட்டி, நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே இந்த இரு கட்சிகள் இணைந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் பலத்தைக் கூட்டி, ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவது, நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது என்பதுடன், மூன்றாவதாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது ஆகிய மூன்று முக்கியமான இலக்குகளை உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவும், 6 வேறு வேறான முக்கிய விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் விவாதித்து உரிய பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆறு உபகுழுக்களும் நியமிக்கப்பட்டன.
நம்பிக்கையூட்டத் தவறியுள்ளது
இந்த உபகுழுக்களின் பொறுப்பில் விடப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக மேலும் ஆறு முக்கிய விடயங்களை வழிநடத்தல் குழு விவாதித்து முடிவுகளை மேற்கொண்டு, உபகுழுக்களின் பரிந்துரைகளை உள்ளடக்கி, புதிய அரசியலமைப்புக்கான முதலாவது இடைக்கால அறிக்கை அரசியல் நிர்ணய சபையாகிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான காலக்கெடுவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் நீண்ட கால தாமதத்தின் பின்பே அந்த இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டிருக்கி;ன்றது.
பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த இந்த இடைக்கால அறிக்கை அந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்யத் தவறியிருக்கின்றது. நாட்டினதும், மக்களினதும் எதிர்காலத்தை வளமாக்கத் தக்கதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், அத்தகைய எதிர்பார்ப்பை உறுதி செய்வதற்கும் இந்த அறிக்கை தவறியிருக்கின்றது.
தமிழர் தரப்புக்களின் எதிர்பார்ப்பாகிய வடக்கும் கிழக்கும் இணைந்த சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய,பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறைக்கு இந்த இடைக்கால அறிக்கை குறைந்தபட்சம் சாதகமான சமிக்ஞையைக்கூட கொண்டிருக்கவில்லை.
ஏற்கனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்கீழ் உருவாக்கப்பட்டு, அரைகுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மாகாணசபை முறைமைக்கு மேல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்றே இந்த அறிக்கை குறிப்புணர்த்தியிருக்கின்றது.
கூடிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும்கூட, அந்த அதிகாரங்களுக்கான எல்லைக்கோடுகள் எதுவும் இதில் குறிப்பிடப்படவில்லை. மாறாக ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தி அதிகாரப் பகிர்வை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருப்பதையே காண முடிகின்றது.
நாட்டின் ஆட்சி முறையில் மாற்றமில்லை
இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கள் ஒற்றையாட்சியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அந்த ஒற்றையாட்சியில் எந்தவிதமான மாற்றங்களையும் புதிய அரசியலமைப்பு கொண்டிருக்கமாட்டாது என்பதையே இடைக்கால அறிக்கை முன்மொழிந்திருக்கின்றது.
ஒற்றையாட்சி முறையை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரரில்லை. ஒற்றையாட்சி முறையின் கீழ் இதுவரையிலும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமையே இதற்குக் காரணமாகும். அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதேயொழிய மீளப்பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்தக் காரணத்திற்காகவே ஒற்றையாட்சி முறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமனதோர் அரசியல் தீர்வை எட்ட முடியாது என்று தமிழர் தரப்பில் வாதிடப்படுகின்றது.
நாட்டில் நடைமுறையில் உள்ள ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டுமானால், அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற அரசியலமைப்பை மாற்றுவதன் ஊடாகவே அது சாத்தியமாகும். அந்த வகையிலேயே தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். புதிய அரசியலமைப்பு அரசியல் தீர்வுக்குரிய அடிப்படையான விடயங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஒற்றையாட்சி முறையில் மாற்றம் என்பதற்கு சிங்களச் சொல்லாகிய ஏக்கிய ராஜிய என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ்;;;;;ப்பதத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வு சாத்தியமாகும் என்று இடைக்கால அறிக்கையை மேற்கோள்காட்டி கூறப்படுகின்றது. ஏக்கிய ராஜிய என்பது ஒற்றையாட்சியையே குறிக்கின்றது. தமிழில் குறிப்பிடப்படுவதுபோன்று ஒருமித்த நாடு என்றால், அது வடமாகாண முதலமைச்சர்; விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருப்பதைப் போன்று எக்சத் என்ற சிங்கள சொல்லாவது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மொத்தத்தில் ஏக்கிய ராஜிய என்ற சிங்கள சொல்லும் அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ஒருமித்த நாடு என்பதும், சமஷ்டி ஆட்சி முறைக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது. அது ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றானது என வாதிடப்பட்டாலும், வஞ்சகமான முறையில் ஒற்றையாட்சியை உறுதிப்படுத்துவதற்கான மயக்கம் தந்து ஏமாற்றுகின்ற சொற்பிரயோக அரசியல் இராஜதந்திர உத்தியாகவே காணப்படுகின்றது.
ஒற்றையாட்சியுமில்லை சமஷ்டியுமில்லை என்றால்……
ஒற்றையாட்;சி என்பது தமிழ் மக்களுக்கு அச்சம் தருகின்ற ஆட்சி முறையாகத் திகழ்கி;ன்றது. சமஷ்டி என்பது,சிங்கள மக்களுக்கும் சிங்களத் தேசியவாதிகளுக்கும் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான ஆபத்தான ஆட்சி முறை என்ற அச்சத்தைத் தருவதாகும். எனவே, இருதரப்பு அச்சத்தையும் போக்கி இடை நடுவில் ஒரு தீர்வை எட்டுவதற்காகவே ஏக்கிய ராஜிய என்ற சிங்களச் சொல் பயன்படுத்தப்பட்டு, அதற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற அரசியல் வியாக்கியானம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
சொற்களில் தொங்கிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இருக்கின்ற நிலைமைக்குள் எட்டக்கூடிய அளவில் ஒரு தீர்வை எட்டிவிட வேண்டும். எனவே வாய்ச்சொல் வீரம் பயன்படுத்தப்படுவதை நிறுத்தி வாயை மூடிக்கொண்டு வருகின்ற தீர்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற தொனியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிரக்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
ஒற்றையாட்சி மற்றும்; சமஷ்டி என்ற சொற்களே அரசியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்றால், சிங்கள சொல்லாகிய ஏக்கிய ராஜிய என்ற சொல்லுக்குப் பதிலாக பிறநாடுகளைப் பின்பற்றி ஆங்கிலச் சொல் ஒன்றை ஏன் தெரிவு செய்திருக்கலாம் அல்லவா? அத்தகைய தெரிவின் மூலம் அதிகாரப்பகிர்வை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள நாடுகளைப் பின்பற்றி அரசியல் தீரவுக்கான அடித்தளத்தை இட்டிருக்கலாமே? இதற்கான சிந்தனை பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்சார்பில் அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றிருக்கின்ற இரண்டு தமிழ்த்தலைவர்களுக்கும் ஏன் எழவில்லை?
நல்லது. சிங்களத் தேசியவாதிகளின் இனவாத அரசியல் போக்கு அதிக செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரு தேசிய அரசியல் சூழலில் அவர்கள் முன்வைக்கின்ற ஆலோசனைகளையே பின்பற்ற வேண்டிய கட்டாய நிலைமையில் மாற்றுக்கருத்தை முன்வைக்க முடியாத நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டிருந்தால்;, அத்தகைய நிர்ப்ந்தமான அரசியல் நிலையில் எவ்வாறு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முன்வைக்கலாம் என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் ஏன் கலந்தாலோசனை செய்யவில்லை.
சிங்கள பௌத்தத்திற்கே மேலாதிக்கம்
உண்மையிலேயே இத்தகைய ஓர் அரசியல் சூழலில் தமிழ் மக்களின் ஆலோசனை பெற்றிருக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்திருக்கவில்லை என்றால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினதும். தமழி; மக்கள் மத்தியில் உள்ள புத்திஜீவிகள் துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளையாவது பெற்றிருக்க வேண்டும். இதில் எதுவுமே நiபெறவில்லை. வழிகாட்டல் குழு 73 தடவைகள் கூடிக் கூடிப் பேசியதாகவும் விடயங்களை விவாதித்ததாகவும் கூறப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும்கூட, அந்தக் குழுவில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முரண்மாடான போக்கே நிலவுகின்றது என்பது தமிழ் மக்களின் தலைவர்களினால் வெளிப்படுத்தப்படவில்லை.
ஒற்றையாட்சியில் மாற்றமில்லை. பௌத்தத்திற்கே முதலிடம். சமஷ்டி முறை குறித்த பேச்சுக்கே இடமில்லை. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படமாட்டாது. தெளிவற்ற அதிகாரப் பரவலாக்கம் என்பது போன்ற அடிப்படை விடயங்களே புதிய அரசியலமைப்புக்கான வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்பதை இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கின்றது. இத்தகைய நிலையில் வரப்போகின்ற புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கள் இந்த நாட்டை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சிறிலங்கா என்றே குறித்திருக்கின்றன. தமிழர்கள் இலங்கை என்று குறுpப்பிட்ட போதிலும், அது சிறிலங்கா என்ற சொல்லுக்கு சரியான சொற்பதமா என்ற கேள்வியும் இருக்கின்றது. இந்த நாட்டின் சரியான பெயர் என்ன என்றதொரு வினா எழும்போது,சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சிறிலங்கா என குறிப்பிடப்படும்பொழுது தமிழில் இலங்கை எனக் குறிப்பிடுவதுகூட ஒரு சர்ச்சையாக விவாதத்துக்குரியதாக மாறலாம்.
அயல் நாடாகிய இந்தியா பல இனங்களையும் பல்வேறு மொழிகளையும் பல மதங்களையும் கொண்ட நாடாகும். அது பொதுவாக இந்தியா என்றே அழைக்கப்படுகின்றது. அங்குள்ள மக்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, அதனைத் தமது தாய்நாடாகவே கருதுகின்றார்கள். இந்திய தேசத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற ரீதியில் தாய்நாட்டுக்காக எதனையும் செய்வதற்குத் தயாராகிவிடுவார்கள். இது அந்த மக்கள் அந்தத் தேசத்தின் மீது கொண்டிருக்கின்ற அபிமானத்தையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
அத்தகைய தேசிய உணர்வு இலங்கை மக்களிடம் ஒருமித்த நிலையில் காணப்படவில்லை. இதுவே இந்த நட்டின் தேசிய அரசியல் யதார்த்தம். பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் தாங்கள் பின்பற்றுகின்ற பௌத்த மதத்தையே தேசிய மதமாகக் கருதுகின்றார்கள். பெரும்பான்மை இனம், பெரும்பான்மையினராகிய தாங்கள் பின்பற்றுகின்ற மதமாகிய பௌத்தம், தங்களுடைய மொழி என்பவற்றின் அடிப்படையில் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடாகவே பார்க்கின்ற அரசியல் பார்வை அந்த மக்களிடையே மேலோங்கியிருக்கின்றது. இந்த நாட்டின் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகின்ற பௌத்த மத பீடங்களும், சிங்களத் தீவிர தேசியவாதிகளும் இந்த நாட்டை பௌத்த சிங்கள நாடாகவே நோக்குகின்றார்கள். அந்த வகையில் பௌத்தர்களான சிங்களவர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள்.
மத, மொழிச்சார்பற்ற கோட்பாட்டு உரிமை
இந்த நிலையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே முதலிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. பௌத்தத்திற்கான அந்த முதலிடம், புதிய அரசியலமைப்பிலும் தொடர்ந்து வழங்கப்பட்டிருக்ககும் என்பதை, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பில், பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்படுகின்ற அதேவேளை, ஏனைய மதங்களும் சமமாக மதிக்கப்படும் என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது. இருப்பினும் பௌத்தத்தைப் பாதுகாப்பதும், பேணுவதும் அரசின் கடமை என்றும் அது குறிப்பிடுகின்றது.இது பௌத்தம் தவிர்ந்த இந்த நாட்டின் ஏனைய மதங்களுக்கு உரிய மத சுதந்திரத்தை புதிய அரசியலமைப்பு உறுதி செய்யமாட்டாது என்பதையே குறிப்புணர்த்துகின்றது.
ஒரு நாட்டின் அரசியலமைப்பானது, அந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் சமமாக மதிப்பதாகவும், அவர்கள் தமது மத,கலை, கலாசாரப் பண்பாடு என்பவற்றை எந்தவிதமான இடையூறுகளுமினறி சுதந்திரமாகப் பின்பற்றுவதற்குரிய உரிமைகளை அங்கீகரித்து உறுதி செய்வதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.
அதேநேரம் பல மதங்களையும் பின்பற்றுகின்ற பல்வேறு இனங்கள் வாழ்கின்ற நாட்டின் அரசியலமைப்பு மத, மொழிச்சார்பற்றதாக, அங்குள்ள மக்கள் அனைவரும் சரிசமமான உரிமைகளைக் கொண்டவர்களாக, அனைவருமே அந்த நாட்டை, தமது தாய்நாடாக நேசிக்கத்தக்க வகையில் வாழ்வதற்கு வழி சமைத்திருக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, இத்தகைய பண்புகளைக் கொண்ட அல்லது மாண்புகளைப் பிரதிபலிக்கத்தக்கதோர் அரசியலமைப்பு உருவாகுமா என்பது குறித்து ஆழமான சந்தேகங்களையே எழுப்பியிருக்கின்றது.
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் மதச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், சிறுபான்மையினர் தமது மதங்களைப் பின்பற்றுவதிலும், தமது வணக்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததை எவரும் மறக்க முடியாது. மத ஆக்கிரமிப்பு ரீதியில் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பேரின மதவாதிகளின் வன்முறைகள்,அவர்களுடைய மென்முறையிலான மதரீதியான ஆக்கிரமிப்புக்கள் என்பன எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் அவர்களுடைய மதங்களும் மத உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையிலான அடிப்படை அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கையில் இடமில்லாத நிலையே காணப்படுகின்றது.
நல்லிணக்கமும், ஜனநாயகமும்
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்த மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. நாட்டில் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம் திருப்திப்படத்தக்க வகையில் இன்னும் உருவாக்கப்படவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனநாயகப் பண்புகள் குறித்து ஆறுதலடைய முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதற்கும், ஏற்கனவே இடம்பெற்ற அத்துமீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், பாதி;க்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் நிவாரணத்தையும் வழங்குவதற்காக நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.
இந்த நடவடிக்கைகள் திருப்தியளிக்கத்தக்கதாக இல்லை. மந்த கதியிலேயே அந்த காரியங்கள் இடம்பெறுகின்றன என்று சர்வதேசமும் ஐநாமன்றமும் அழுத்தம் திருத்தமாக அரசாங்கத்திற்கு நேரடியாகச் சுட்டிக்காட்டி, முன்னேற்றகரமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றன.
இத்தகைய ஒரு பின்னணியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அது தொடர்பிலான இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது, ஆனால் புதிய அரசியலமைப்புக்குக் கட்டியம் கூறுகின்ற இந்த இடைக்கால அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல் சூழலில் போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் ஜனநாயகமும், ஜனநாயக உரிமைகளும், அவர்கள் இந்த நாட்டின் தேசிய மட்டத்தில் பங்கேற்கத்தக்க வகையிலான அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.
இது ஓர் ஆரம்ப இடைக்கால அறிக்கையே தவிர புதிய அரசிலமைப்பின் வரைபுக்குரிய இறுதி வடிவத்தை வெளிப்படுத்துகின்ற அறிக்கையல்ல என்பது தெளிவாகத் தெரிகின்றது ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுக்கான விடயங்களானாலும்சரி, ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய முன்மொழிவுகளாக இருந்தாலும்சரி, அவைகள் பரந்த அளவில் முன்வைக்கப்பட்டு, ஆய்வு மற்றும் விவாத நிலைமைகளில் குறுக்கப்படுவதே வரலாற்று அனுபவமாகும். இந்த அனுபவத்தின் பின்னணியில் முதலாவது இடைக்கால அறிக்கையிலேயே அரைகுறை நிலையிலான அடிப்படை விடயங்களையே கொண்டிருக்கும் என காட்டப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைபு பல்வேறு வடிவங்களில் மேலும் குறுகிச் செல்லவே செயயும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
Spread the love