குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் ரோஹினிய மக்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். கல்கிஸ்ஸ பகுதியில் ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த வீட்டினை பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில சுற்றி வளைத்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த ரோஹினிய முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சராக மட்டுமன்றி பௌத்தராகவும் இந்த சம்பவத்தை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்தர்கள் அஹிம்சை கொள்கைகளை பின்பற்றுவோர் எனவும், இவ்வாறான சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் இலங்கை தற்காலிக அடிப்படையில் இவ்வாறான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்