161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இந்த தீர்ப்பின் ஊடக இறந்த மகள் எனக்கு திருப்பி கிடைக்க போறதில்லை. ஆனாலும் இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெற கூடாது. என புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
புங்குடுதீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015.05.13ஆம் திகதி காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது நாடளாவியரீதியில் மாணவிக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி மாணவியின் தாயாரை சந்தித்து, சிறப்பு நீதிமன்றம் ஊடாக நீதி பெற்று தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.
அந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று கடந்த 29.05.2017 ஆம் திகதி முதல் நீதாய (ரயலட் பார்) விளக்க முறையில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
குறித்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் பூர்த்தி யடைந்த கடந்த 13ஆம் திகதி எதிரிகள் தரப்பு தொகுப்புரைகளுடன் நிறைவடைந்ததை அடுத்து , நேற்றைய தினம் (புதன்கிழமை) வழக்கின் தீர்ப்புக்காக தீர்ப்பாயம் கூடியது.
சட்டத்தரணிகள் மன்றில் தோற்றம்.
வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் மன்றில் தோன்றினர்கள்..
எதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் மற்றும் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தா ஆகியோர் மன்றில் தோன்றினார்கள்.
பாதிக்கபபட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் நலன் காக்கும் பொருட்டு சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் மன்றில் தோன்றினார்கள்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம்
ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக் குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
132 பக்கங்களில் தீர்ப்பு.
அதனை தொடர்ந்து தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி தீர்ப்பினை காலை 10 மணிக்கு வாசித்தார். 132 பக்ககளில் தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தது. அதில் ,
குறித்த வழக்கில் ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக, சதித்திட்டம் தீட்டியமை , கடத்தல் , வன்புணர்வு, கொலை , உடந்தை அளித்தமை உள்ளிட்ட 41 குற்றசாட்டுகள் வழக்கு தொடுனர் தரப்பினால் சுமத்தப்பட்டன.
அத்துடன் எதிரிகளுக்கு எதிராக 53 சாட்சியங்களை வழக்கில் அனைத்து இருந்ததுடன் வ – 01 தொடக்கம் வ – 27 வரையிலான சான்று பொருட்களும் முன் வைக்கபட்டன.
இந்த வழக்கின் 2ஆம் , 3ஆம் , 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகளுக்கு எதிராக கண்கண்ட சாட்சியங்களான உதயசூரியன் சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் சாட்சியம் அழைத்துள்ளனர்.
சாட்சியங்கள் ஒப்பீடு.
அவர்களின் சாட்சியங்கள் தவிர 2ஆம் எதிரியை சம்பவ தினத்தன்று சம்பவ இடத்திற்கு அருகில் கண்டதாக பாடசாலை மாணவனான ஒன்பதாவது சாட்சியான மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன் அதே இடத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளை கண்டதாக நாலாவது சாட்சியமான பாலசிங்கம் பாலசந்திரன் சாட்சியம் அளித்துள்ளார். இவர் 2ஆம் எதிரியின் மைத்துனன். இவரின் கூட பிறந்த தங்கை தான் எதிரியின் மனைவி. அத்துடன் 15ஆவது சாட்சியமான சதானந்தரூபிணி சம்பவ தினத்தன்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் 5ஆம் எதிரியை கண்டதாக சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த சாட்சியங்களை ஒப்பிடு செய்யும் போது அவற்றில் முரண்பாடுகள் காணப்படவில்லை.
அதேவேளை வழக்கின் 4ஆம் , 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்குடுதீவில் ஆலடி சந்தி பகுதியில் வாகனத்தில் இருந்ததாக 7ஆவது சாட்சியான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளித்துள்ளார். இவரின் சாட்சியத்தை ஒப்பிடு செய்யும் விதத்தில் மாணவியின் தாயார் வழங்கிய சாட்சியத்தில் மாணவி அன்றைய தினம் (12ஆம் திகதி) ஆலடி சந்தியில் வாகனம் ஒன்றில் இருந்து தன்னை சிலர் பார்த்ததாக கூறியதாக சாட்சியம் அளித்துள்ளார்.
4ஆம் , 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் இந்த மன்றில் 12ஆம் திகதி கொழும்பில் நின்றதாக கூறினார்கள் ஆனாலும் சாட்சியங்களை முன் வைக்க வில்லை ஆனால் சம்பவ தினத்தன்று 13ஆம் திகதி கொழும்பில் நின்றமைக்கான சாட்சியங்கள் சான்றுகளை மன்றில் முன் வைத்தனர்.
7 எதிரிகளும் குற்றவாளிகள்.
எனவே இந்த வழக்கில் கூட்டு வன்புணர்வு , கொலை , கடத்தல் , சதித்திட்டம் தீட்டியமை , உடந்தை அளித்தமை உள்ளிட குற்ற சாட்டுக்களில் 2ஆம் , 3ஆம் , 4ஆம் , 5ஆம் , 6ஆம் , 7ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளை குற்றவாளியாக தீர்ப்பளிக்கிறேன். என தீர்ப்பளித்தார்.
2 மணிநேரம் தீர்ப்பு வாசிப்பு.
குறித்த தீர்ப்பினை 2 மணி நேரமாக நீதிபதி தொடர்ந்து வாசித்து. மதியம் 12 மணிக்கு தனது தீர்ப்பினை அறிவித்தார்.
நீதிபதி பா.சசிமகேந்திரனின் தீர்ப்புடன் ஒத்துபோவதாக நீதிபதி அ. பிரேமசங்கர் தெரிவிப்பு.
அதனை அடுத்து தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான அன்னலிங்கம் பிரேமசங்கர் , சகோதர நீதிபதியான பாலசந்திரன் சசிமகேந்திரன் அளித்த தீர்ப்புடன் ஒத்துபோவதாகவும் , அதே தனது தீர்ப்பு என அறிவித்தார்.
நீதிபதி இளஞ்செழியன் 345 பக்கங்களில் தீர்ப்பு.
அதனை தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், தனது தீர்ப்பினை மதியம் 12.05 நிமிடத்திற்கு வாசிக்க ஆரம்பித்தார். அவர் 345 பக்கத்தில் தீர்ப்பெழுதி இருந்தார்.
தனது தீர்ப்பில் , சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புக்கள் , ஐநா நீதிமன்ற தீர்ப்புக்கள் , மனித உரிமை தீர்ப்புகள் , உகண்டா தீர்ப்பு , யுத்த குற்ற தீர்ப்புக்கள் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் என்பவற்றை சுட்டிக்காட்டியும் , இலங்கையில் கிருஷாந்தி , சரத் அம்பேபிட்டிய, பண்டாரநாயக்க உள்ளிட்ட ரயல்ட் பார் தீர்ப்புக்களை சுட்டி காட்டி தீர்பெழுதி இருந்தார்.
2, 3, 5, 6 ஆகிய எதிரிகளுக்கு எதிராக கண்கண்ட சாட்சியங்கள் உள்ளான. அத்துடன் மரபணு பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் இருந்து மீட்கப்பட்ட தலைமுடியானது , மாணவியின் உடையது அல்லது தாயினுடையது அல்லது 1, 2 மற்றும் 3 ஆம் எதிரிகள் தாய் வழி உறவுள்ளவர்களினதாக இருக்க வேண்டும் என 53ஆவது சாட்சியமான ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி றுவான் இளையபெருமா சாட்சியம் அளித்துள்ளார்.
மாணவியின் உடலில் இருந்தது எதிரியின் உரோமமே.
மாணவியின் உரோமம் அவரின் உடலில் உதிர்ந்த நிலையில் இருக்க சந்தர்ப்பம் குறைவு , தாயின் உரோமம் அந்த இடத்தில் வந்திருக்க முடியாது. எனவே அது 2ஆம் , 3ஆம் எதிரிகளினுடையதாக தான் இருக்க வேண்டும் ஏனெனில் , கண்கண்ட சாட்சியங்களின் சாட்சியத்தின் பிரகாரம் முதலில் பெரியாம்பி எனும் 6ஆம் எதிரி வன்புணர்ந்தார், பின்னர் 5ஆவதும் , 2 மற்றும் 3ஆம் எதிரிகள் தொடர்ச்சியாக வன்புணர்ந்தனர் என சாட்சியம் அளித்துள்ளனர்.
அவ்வாறு எனில் இறுதியாக வன்புணர்ந்த எதிர்களின் உரோமம் மாணவியின் உடலில் காணப்பட்டு இருக்கலாம்.
சுவிஸ்குமார் தலைமையில் சதித்திட்டம்.
அடுத்து 4, 8, மற்றும் 9ஆம் எதிரிகள் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் 5, மற்றும் 6ஆம் எதிரிகளுடன் வெள்ளை நிற வாகனத்தில் இருந்துள்ளனர். அதன் பின்னர் சுவிஸ்குமார் தலைமையில் 4, 8 ஆம் எதிரிகள் கொழும்புக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அந்த குழு சம்பவ தினமான 13ஆம் திகதி CCTV கமரா உள்ள இடங்களில் நடமாடி உள்ளனர். அது அவர்களின் சதித்திட்டம். தாம் குற்றம் நடந்த சமயம் கொழும்பில் நின்றமைக்கான சாட்சியங்களை உருவாக்கியுள்ளனர்.
12ஆம் திகதி கொழும்பில் நின்றதற்கு ஆதாரம் இல்லை.
ஆனால் 12 திகதி கொழும்பில் நின்றமைக்கான எந்த ஆதாரத்தையும் சாட்சியத்தையும் மன்றில் முற்படுத்த வில்லை. 12ஆம் திகதி கொழும்பில் நின்றதற்கான எந்த CCTV காட்சிகளையும் மன்றில் சமர்ப்பிக்க வில்லை.
Who is Viththiya ?
கொழும்பில் நின்ற சுவிஸ்குமார் தலைமையில் 4, 7 மற்றும் 8ஆம் சந்தேக நபர்கள் புங்குடுதீவு வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கையில் தங்களுக்கு வித்தியாவை யார் என்று தெரியாது , என்ன நிறம் என்று தெரியாது ,Who is Viththiya ? என கேட்டார்கள்.
யாரென்றே தெரியாத வித்தியாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள புங்குடுதீவு வந்தார்களா ? இல்லை இவர்கள் புங்குடுதீவு வந்ததன் நோக்கம் இந்த கொலையின் முக்கிய குற்றவாளிகள் இருவர் பொலிசாரினால் கைது செய்யபட்டு விட்டனர், ஏனைய இருவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் ஆகையால் அது தொடர்பில் நேரில் அறிந்து கொள்ளவே புங்குடுதீவு வந்துள்ளார்கள்.
அப்படி வந்தவர்கள் 17ஆம் திகதி வரையில் புங்குடுதீவில் நடமாடி உள்ளனர். அந்த நிலையிலேயே 4, 5, 6, 7, மற்றும் 8ஆம் எதிரிகள் 17ஆம் திகதி ஊர்காவற்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
அன்றைய தினம் இரவு 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஊர் மக்களால் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார்.
விஜயகலா மகேஸ்வரன் , சுவிஸ் குமாரை காப்பாற்றி விட்டார்.
அந்நேரம் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இரவு 11 மணியளவில் அந்த இடத்திற்கு சென்று , சுவிஸ் குமாரை அடிக்க வேண்டாம் என காப்பாற்றினார். அது நல்ல விடயம்.
ஆனால் அங்கே போன அவர் முதலில் கேட்ட கேள்வி நீ சசியின் அண்ணாவா ? என யார் அந்த சசி இந்த வழக்கில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு கொண்டிருந்த நபர்.
சுவிஸ் குமாரை அடிக்க வேண்டாம் என மக்களிடம் இருந்து காப்பாற்றினவர் அந்த இடத்தில் 2 மணி நேரம் காத்திருந்து சுவிஸ் குமாரை பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
அதன் பின்னர் புங்குடுதீவுக்கு சட்டபீடாதிபதி வி.ரி.தமிழ் மாறன் உடன் யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் மற்றுமொரு சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்ற வேளை சுவிஸ் குமார் ஸ்ரீகஜனிடம் சரணடைந்துள்ளார்.
பொலிசாரின் துர்நடத்தை.
சரணடைந்த சுவிஸ் குமாரை யால்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக சட்டபீடாதிபதி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். அங்கு தான் தான் பொலிசாரின் துர்நடத்தை காரணமாக சுவிஸ் குமார் விடுவிக்கபாடுகின்றார்.
சுவிஸ் குமார் விடுவிக்கபப்ட்டத்தை அறிந்த மக்கள் நடாத்திய போராட்டத்தின் பலனாக சுவிஸ்குமார் மீண்டும் 19ஆம் திகதி வெள்ளவத்தை பொலிசாரினால் கைது செய்யபப்ட்டார்.
அவ்வாறு கைது செய்யப்பட்ட சுவிஸ் குமாரை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்துமாறு அப்போதைய ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டேஸ் பெரேராவுக்கு , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறிய போது , அவர் அதனை செய்யவில்லை. அதனை அந்த தவறை இந்த மன்றில் வெளிப்படையாக கூறினார்.
சிறையில் 2 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது.
அடுத்து சுவிஸ் குமாருக்கும் இப்ரான் என்பருக்கும் இடையில் சிறைச்சாலையில் 2 கோடி ரூபாய் தொடர்பில் பேரம் பேசப்பட்டு உள்ளது. இப்ரான் தனது சாட்சியத்தில் சுவிஸ் குமார் 2 கோடி தருவதாக கூறியதாக கூறினார். சுவிஸ் குமார் தனது சாட்சியத்தில் , இப்ரான் தான் தன்னிடம் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறினார்.
இங்கே இப்ரான் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி இருந்தால் , ஏன் சுவிஸ் குமார் தன்னுடன் இருந்த ஏனைய எட்டு பேருக்கும் அதனை கூறவில்லை இந்த வழக்கில் அவரின் கூட பிறந்த சகோதரன் , ஒன்று விட்ட சகோதரன் , மனைவியின் சகோதரன் (மச்சான்) ஆகியோர் அவருடன் சிறையில் இருக்கும் போது கூட ஏன் அவர் அதனை அவர்களிடம் கூறவில்லை. அதேபோன்று சிறையில் அவரை பலதடவைகள் அவரின் மனைவி மகாலட்சுமி சந்தித்து உள்ளார். அப்போது கூட இப்ரான் காசு கேட்டு மிரட்டுவதாக கூறவில்லை.
இது சித்திரவதை வழக்கல்ல .
இந்த வழக்கில் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் இது என்ன வழக்கு என்பதனை மறந்து விட்டார்களோ என எண்ண தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் தரப்பில் 200க்கும் மேற்பட்ட பக்கங்களில் எதிரிகள் சித்திரவதை புரியபப்ட்டதாக கூறிப்பிட்டு உள்ளனர்.
எதிரிகளை ஆடைகளை களைந்து கட்டி தூக்கி சித்திரவதை புரிந்ததாக கூறினார்கள் ஆனால் இந்த வழக்கில் மாணவியின் ஆடைகள் களையப்பட்டு , கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு , மாணவியின் உள்ளாடையை வாய்க்குள் திணித்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
இங்கே சித்திரவதை தண்டனைக்கு உரிய குற்றமாக உள்ள போதிலும் , இந்த எதிரிகள் சித்திரவத்தைக்கு உள்ளானார்கள் என்பதனை ஆதாரமாக மன்றில் கூறமுடியவில்லை. சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையில் எதிரிகள் சித்திரவதைக்கு உள்ளானதாக குறிப்பிடப்படவில்லை.
கொலையை இராணுவமோ , கடற்படையோ செய்யவில்லை.
இந்த குற்றத்தை இராணுவம் தான் செய்தது என 2ஆம் எதிரி கூறினார் 4ஆம் எதிரி கடற்படை தான் செய்தது என கூறினார். இந்த குற்றத்தை இராணுவமோ , கடற்டையோ செய்யவில்லை. ஏனெனில் இந்த வழக்கில் சாட்சியங்களான தனுராம் , பாலசந்திரன் சதானந்தரூபிணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு அருகில் எதிரிகளை கண்டதாக மாத்திரமே சாட்சியம் அளித்துள்ளனர். எந்த இடத்திலும் தாம் சம்பவ இடத்திற்கு அருகில் இராணுவத்தையோ , கடற்படையையோ காண்டதாக சாட்சியம் அளிக்க வில்லை.
ஒருவரை கொலை செய்தால் ஒன்றில் எரிப்பார்கள் , அல்லது புதைப்பார்கள் அல்லது மறைப்பார்கள் ஆனால் , இவர்கள் கொலை புரிந்த பின்னர் வீதியில் இருந்து 15 அடி தூரத்தில் அரலி பற்றைக்குள் சடலத்தை கொடூரமான முறையில் கட்டி போட்டு உள்ளனர்.
விசாரணைகளை திசை திருப்ப முயற்சி.
அதன் ஊடாக மாணவியை தேடி ஊரவர்கள் வரும் போது , அந்த நிலையில் சடலத்தை கண்டால் அவர்கள் வேறு விதத்தில் சிந்திப்பார்கள் என கருதியே அவ்வாறு செய்துள்ளார்கள். அதன் ஊடாக வழக்கின் விசாரணை போக்கினை மாற்ற முயற்சித்துள்ளார்கள்.
இந்த வழக்கில் மரபணு சோதனைக்கு அனுப்பட்ட சான்று பொருட்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை.
விமான சீட்டை ஏன் புதுப்பிக்க வில்லை.
சுவிஸ் குமார் 2015. 05. 07 சுவிஸ் நாட்டுக்கு செல்ல இருந்ததாகவும் , வவுனியாவில் நண்பரின் மரண சடங்குக்கு சென்று விட்டு செல்லும் போது விமானத்தை தவற விட்டதாகவும் சாட்சியம் அளித்திருந்தார்.
அன்றைய தினம் விமானத்தை தவற விட்டு இருந்தால், மீண்டும் விமான திகதியை புதுபித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் 19ஆம் திகதி வெள்ளவத்தையில் கைது செய்யப்படும் வரையில் விமான சீட்டை புதுப்பிக்க வில்லை.
தடயவியல் பிரிவு பொறுப்பற்று செயற்பட்டது.
அதேவேளை பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அங்கு தடயவியல் பரிசோதனைக்கு, தடயவியல் பிரிவு கான்ஸ்டபிளே சென்றுள்ளார். அந்த பிரிவில் பொலிஸ் பரிசோதகர் , உப பொலிஸ் பரிசோதகர் என அதிகாரி தரத்தில் உள்ளோர் பரிசோதனைக்கு செல்லாது கான்ஸ்டபிளை அனுப்புகின்றனர். இது அவர்களின் பொறுப்பற்ற செயலையே காட்டுகின்றது.
விசாரணைகளை பொலிஸ் நாசம் செய்தது.
இந்த வழக்கு விசாரணைகளை போலீசார் நாசம் செய்து வைத்த நிலையில் அதனை பொறுபேற்ற குற்றபுலனாய்வு திணைக்களத்தினர் , விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
அத்துடன் இந்த வழக்கினை திறமையாக வழக்கு தொடுனர் தரப்பினர் நெறிப்படுத்தி இருந்தனர். அதில் குறிப்பாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணத்திற்கும் எனது பாராட்டுக்கள். அத்துடன் இந்த வழக்கினை ஆரம்பத்தில் இருந்து அறிக்கையிட்டு மாணவிக்கு நீதி கிடைக்க போராடிய ஊடகங்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த வழக்கில் 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிராக குற்றசாட்டுக்கள் நிருபிக்கபப்டாத நிலையில் அவர்களை நிரபராதிகள் என கருதி விடுவிக்கிறேன்.
50 நிமிடம் தீர்ப்பு வாசிப்பு.
ஏனைய 2, 3, 4, 5, 6, 8 மற்றும் 9ஆம் எதிரிகளை குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கிறேன் என தனது தீர்ப்பினை 50 நிமிடங்கள் வாசித்தார்.
நிரபராதிகள் கூண்டில் இருந்து இறக்கபப்ட்டனர்.
அதனை தொடர்ந்து வழக்கில் இருந்து நிரபராதிகள் என மன்றினால் விடுவிக்கப்பட்ட முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோர் எதிரி கூண்டில் இருந்து இறக்கபப்ட்டனர்.
ஏன் மரண தண்டனை விதிக்க கூடாது
அதனை தொடர்ந்து எதிரிகளிடம் உங்களுக்கு ஏன் மரண தண்டனை விதிக்க கூடாது என தீர்ப்பாயம் வினாவியது, அதற்கு அவர்கள் தனித்தனியே பதில் அளித்தனர்.
.நான் நிரபராதி.
அதன் போது இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தெரிவிக்கையில், இந்த குற்றத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சந்தேகத்தில் தான் என்னை பிடித்தார்கள். எனக்கு மூன்று பிள்ளைகள் உண்டு .நான் நிரபராதி என தெரிவித்தார்.
CID யும் பொலிசாரும் சிக்க வைத்து விட்டார்கள்.
மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தெரிவிக்கையில் , இந்த வழக்குக்கும் எனக்கும் தொடர்பில்லை நான் எந்த குற்றமும் செய்ய வில்லை. சிஐடியும், பொலிசாரும் சேர்ந்து எங்களை மாட்டி விட்டார்கள் என தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள CCTV களை பரிசோதியுங்கள்.
நாலாம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் தெரிவிக்கையில் , எனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன். அதற்கு வெள்ளவத்தை சிக்னல் , வீதிகள், ஏஞ்சல் லொட்ஜ் , உள்ளிட்ட இடங்களில் உள்ள CCTV கமராக்களை சோதனையிட்டால் தெரியும்.
எனக்காக யாரும் வெளியில் இல்லை. அம்மா இருந்தா , அவர் வித்தியாவின் தாயாரை மிரட்டினார் என சிறையில் அடைத்து அவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார். எனக்கு மனைவி பிள்ளைகள் உண்டு நான் நிரபராதி என தெரிவித்தார்.
குற்றவாளிகள் வெளியில் உள்ளார்கள்.
ஐந்தாம் எதிரியான தில்லை நாதன் சந்திரஹாசன் தெரிவிக்கையில் ,
நான் 5 பெண் பிள்ளைகளுடன் பிறந்தனான். எனக்கு பிள்ளைகளும், உண்டு நான் இந்த குற்றத்தை செய்யவில்லை. எமக்கு எதிராக இந்த மன்றில் கொண்டு வரப்பட்ட சாட்சியங்கள் கண்கண்ட சாட்சியங்கள் இல்லை. அவர்கள் கண்கெட்ட சாட்சியங்கள். சட்ட வைத்திய அதிகாரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஐந்து பேரின் விந்தணுக்கள் எடுக்கப்பட்டதாக கூறினார். பின்னர் அதற்கு என்ன நடந்தது என தெரியவில்லை. இந்த வழக்கில் எம்மை சிக்க வைப்பதற்காக அதனை அழைத்து விட்டார்களோ தெரியவில்லை.
இதேபோன்ற குற்றங்கள் எங்கள் பிரதேசத்தில் பலது நடந்து உள்ளது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எமக்காக சட்டத்தரனிகள் முன்னிலையாக முன் வரவில்லை. சட்டத்தரணிகள் முன் வந்து இருந்தால் எமது நியாயங்களையும் எடுத்து கூற முடிந்திருக்கும். ஒரு சாட்சியங்கள் கூட உண்மையான சாட்சியங்கள் இல்லை.
வெளியில் இருப்பவர்கள் குற்றவாளிகள் தண்டிக்கபப்ட்டு விட்டார்கள் என நினைக்க வேண்டாம். இங்கே தண்டிக்கபப்ட்டு உள்ளவர்கள் நிரபராதிகளே .. குற்றவாளிகள் வெளியில் தான் உள்ளார்கள். அவர்கள் தொடர்பில் கவனமாக இருங்கள். என தெரிவித்தார்.
கடவுள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை.
உண்மைக்குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.
ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் தெரிவிக்கையில் ,
மாணவியின் தாய் தனது சாட்சியத்தின் போது , மகள் தன் பின்னால் யாரும் வருவது பற்றியோ , தொல்லை கொடுத்தார்கள் என்றோ கூறவில்லை என சாட்சியம் அளித்தார். ஆனால் நான் மாணவியை ஒரு தலையாக காதலித்து தொந்தரவு செய்ததாக இங்கே கூறுகின்றார்கள். நான் குற்றபுலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலம் கொடுக்க வில்லை. அவர்கள் தாம் எழுதிய வாக்கு மூலத்தில் என் கையெழுத்தை சித்திரவதை புரிந்து வாங்கினார்கள்.
அதேபோலவே கண்கண்ட சாட்சியம் என சாட்சியம் அளித்த உதய சூரியன் சுரேஷ் கரனை சித்திரவதை புரிந்து துன்புறுத்தி எனக்கு எதிராக சாட்சி கூற வைத்தனர்.
உண்மையான குற்றவாளிகள் வெளியில் தான் உள்ளனர். கடவுள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார். உண்மைக் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிபடுவார்கள். அப்போதே எங்களுக்கும் உயிரிழந்த மாணவிக்கும் நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.
மாணவிக்கு நீதி கிடைக்க வில்லை.
எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் தெரிவிக்கையில் , நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன். அதற்கு சாட்சியங்கள் உண்டு. எமக்கோ அந்த மாணவிக்கோ நீதி கிடைக்க வில்லை என தெரிவித்தார்.
செய்மதியை பரிசோதித்து உண்மை குற்றவாளிகளை பிடியுங்கள்.
ஒன்பதாம் எதிரியான , மகாலிங்கம் சசிக்குமார் தெரிவிக்கையில் ,
இந்த குற்றங்களை நான் செய்யவில்லை CID எங்களுக்கு எதிராக பொய் சாட்சியங்களை கொண்டு வந்தது.
இந்த நீதிமன்றினால் முடியுமானால் குற்ற சம்பவம் நடந்த தினத்தன்று , குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதனை செய்மதி ஊடாக கண்டறியுங்கள். போலீசையும் CID யையும் நம்பாதீர்கள் என தெரிவித்தார்.
தீர்ப்பு வாசிப்பு.
அதனை அடுத்து மன்றினால் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கான தீர்ப்பு வாசிக்கப்பட உள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
அதனை அடுத்து நீதிபதிகள் உட்பட மன்றில் இருந்த அனைவரும் எழுந்து நிற்க , மின்விளக்குகள் , மின் விசிறிகள் நிறுத்தப்பட்டு நீதிபதிகள் தீர்ப்பினை வாசித்தனர்.
வழக்கின் 2, 3 , 5, மற்றும் 6 ஆம் எதிரிகள் மாணவியை கடத்த திட்டம் தீட்டியமை , கடத்தியமை , வன்புணர்ந்தமை , கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுக்கு, மரண தண்டனை விதித்தும் , 30 வருட சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன் தலா 40 ஆயிரம் தண்டம் பணம் கட்ட வேண்டும் என்றும் தவறின் 4 மாத சிறை தண்டனையும் மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் தவறின் 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன் 4, 8 மற்றும் 9 ஆம் எதிரிகள் குற்றத்திற்கு இக் குற்றங்களை புரிவதற்கு உடந்தை அளித்தாமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றத்திற்கு மரண தண்டனையும், 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன் தண்டப்பணமாக தலா 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் தவறின் 7 மாத சிறை தண்டனை , எனவும் மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும் தவறின் 2 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கபப்ட்டது.
நிரபராதி மீண்டும் சிறையில்.
குறித்த வழக்கில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் நிரபராதி என மன்றினால் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்த வழக்கில் தம்மை கைது செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை வெளியில் வந்து வெட்டுவேன் என மிரட்டியமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கில் இவர் விளக்கமறியல் கைதியாக உள்ளதினால் அவர் தொடர்ந்து சிறையிலையே தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
கொலை மிரட்டல் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 3ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றுக்கு செல்வோம்.
எமது தரப்பினர் இந்த குற்றத்தை செய்யவில்லை. எமக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விட்டார்கள். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றுக்கு செல்வோம் என எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இனி எந்த தாயும் கண்ணீர் சிந்த கூடாது.
இந்த தீர்ப்பின் ஊடக இறந்த மகள் எனக்கு திருப்பி கிடைக்க போறதில்லை. ஆனாலும் இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெற கூடாது. இவ்வாறான செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு நல்லதொரு பாடமாக அமையும்.
எனது மகளுக்கு நீதியை பெற்று தந்த நீதிபதிகள் , பொலிஸ் , குற்றப்புலனாய்வு பிரிவு , சட்டத்தரணிகள் , ஊடகங்கள் என அனைவருக்கும் நன்றிகள் என கண்ணீர் சிந்த கை கூப்பி நன்றி தெரிவித்தார்.
என் கணவரை விடுதலை செய்யுங்கள்.
முதாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் எனது கணவர். அவர் இன்றைய தினம் நிரபராதி என விடுவிக்கப்பட்டு உள்ளார்.
அவரை கைது செய்து சிறையில் வைத்து இருந்த போது நான் கடலுக்கு சென்று மட்டி அடித்து , கச்சான் விற்றே வாழ்ந்தேன். மிக வறுமையில் வாடியமையால் , பாடசாலை முடித்து பிள்ளைகள் வந்தால் அவர்களிடம் கச்சானை கொடுத்து விற்க அனுப்புவேன். எமக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை.
இன்றைய தினம் மாணவி கொலை வழக்கில் அவர் நிரபராதி என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து சிறைசாலையில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ளார்.
நிரபராதியான எனது கணவரை பொலிசார் பிடித்த கோபத்தில் அப்போது அவரை பிடித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை வெட்டுவேன் என கோபத்தில் கூறினார்.
அவ்வாறு கூறியதால் , அவருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில் அவர் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
இன்றைய தினம் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் அவரால் வீடு வர முடியவில்லை. எமது குடும்ப பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு எனது கணவரை அந்த வழக்கில் இருந்து மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
11ஆவது சந்தேக நபர் விடுதலை.
மாணவி கொலை வழக்கில் 11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட உதயசூரியன் சுரேஷ்காரனுக்கு சட்டமா அதிபர் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கியதை அடுத்து அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறி (கண்கண்ட சாட்சி) சாட்சியம் அளித்திருந்தார்.
இதுவரை காலமும் சாட்சியத்தின் பாதுகாப்பு கருதி சுரேஷ்கரன் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்றைய தினம் (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகள் கண்டிக்கு …
குற்றசாட்டு நிரூபிக்கப்பட்ட 7 மரண தண்டனை கைதிகளையும் கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Spread the love