இந்தியாவின் ஆந்திர மாநிலம், அனந்த்பூர் அரசு மருத்துவமனையில் 12 மணி நேரத்தில் 9 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.
நாட்பட்ட நோய்களே இவர்களின் இறப்புக்குக் காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 9 பேரும் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இறந்த 9 பேரில் 4 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் சில நாட்களுக்கு முன்னதாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் ஒவ்வொருவரின் இறப்புக்கும் நாள்பட்ட சிறுநீரக நோய் முதல் இதய நோய் வரை பல்வேறு காரணங்கள் இருந்தன என்றும் மருத்துவமனைக் கண்காணிப்பாளரான மருத்துவர் ஜெகன்னாத் கூறியுள்ளார்.
குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களே. அவர்கள் என்ன நிலையில் இருந்தாலும் அவர்களை நாங்கள் திருப்பி அனுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மருத்துவமனையில் போதிய சிறப்பு வசதிகள் இல்லாததாலேயே இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.