பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டனர் என பாரதீய ஜனதாவின் சிரேஸ்ட தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.
பிரச்சினைகளை எழுப்புவதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டதாகவும், தனக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை எனவும்; தனக்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஊடகங்களில் பேசுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் செயல்படுத்த தகுதியான பயனுள்ள யோசனைகள் தன்னிடம் உள்ளதாக தான் நம்புவதாகவும் கூறிய அவர், நிதி விவகாரங்களில் நிபுணர்களாக கருதப்படக்கூடிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் போன்றவர்கள் கூறுகிறவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவற்றை அரசியல் ரீதியிலானவை என நிராகரித்து விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளர். அவரது குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பாரதீய ஜனதா தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.