குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு படைவீரரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதனை எதிர்க்கின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் கடமையாற்றிய ஒரு சில குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தாம் கூறியதனை கூட்டு எதிர்க்கட்சியினர் திரிபுபடுத்தி ஒட்டுமொத்த படையினரையும் இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு இராணுவப் படையதிகாரியையும் இராணுவ நீதிமன்றில் நிலைநிறுத்துவதனை தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குற்றம் இழைத்தவர்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியலில் ஈடுபடும் போது பௌத்த பிக்குகள் தொடர்பிலும் விமர்சனங்கள் வெளியிடப்படுவதனை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.