அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ரொம் பிரைஸ் (Tom Price) பதவி விலகியுள்ளார். அரச பயணங்களுக்காக தனி விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை உதவி சுகாதாரச் செயலாளரான டொன் ஜெ ரைட் தற்காலிக சுகாதாரச் செயலாளராக நியமிக்கப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் அதிகாரிகளைத் தவிர ஏனையோர் தங்கள் தொழில் தொடர்பான பயணங்களை வணிக விமானங்களில் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற நிலையில் இதை மீறி டாம் பிரைஸ் 26 முறை தனி விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரைசின் பயணங்களால் 1 மில்லியன் டொலர் செலவானதாக தகவல்கள் வெளியானதினை தொடர்ந்து ரொம் பிரைஸ் மன்னிப்பு கோரியிருந்ததுடன் செலவான தொகையை திருப்பித் தருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.