குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெயினில் இருந்து காட்டாலன் மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசின் கடும் எதிர்ப்பு வன்முறைகளுக்கு மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 42.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில், 90 சதவீதம் மக்கள் சுதந்திர நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தனி நாடு கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஸ்பெயின் அரசும், அரசியலமைப்பு நீதிமன்றமும் இதற்கு அனுமதிக்காததால், வாக்கெடுப்பை முறியடிக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனி நாடு கேட்கும் உரிமையை காட்டாலன் வென்றெடுத்திருப்பதாகவும், சுதந்திர பிரகடனத்துக்கான கதவு திறக்கப்பட்டிருப்பதாகவும் காட்டாலன் தலைவர் கார்லஸ் பூகிடமான்ட் தெரிவித்தார்.
காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் வாக்கெடுப்பு ஆரம்பம்
Oct 1, 2017 @ 07:4
காவல்துறையினரின் தடைகளை மீறி ஸ்பெய்னின் கட்டாலான் பிராந்தியத்தில் சுதந்திரப் பிரகடனத்திற்கான வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த காவல்துறையினர் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
நாட்டின் அரசியல் சாசனத்திற்கு விரோதமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் ஸ்பெய்ன் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் செல்வச் செழிப்பு மிக்க பிராந்தியமாக கட்டாலான் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிராந்திய மக்கள் சுதந்திரப் பிரகடனமொன்றை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் இடங்களுக்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்; பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாகவும் ஸ்பெய்ன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வாக்கெடுப்பு நிலையங்களை திறக்க அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனவும் காவல்துறையினர் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.