மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான் மக்கள் தங்கள் தேசியத்தையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் சாத்தியப்படுத்தியுள்ளனர். ஈராக் அரசுக்கு பாடம் புகட்டியுள்ளனர்.
அ.நிக்ஸன்
குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் போன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டிலும் சுயாநிர்ணய உரிமை என்ற கருத்துடனும் நிலையாக கால் ஊன்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றதா என்பது கேள்வி.
தமிழரசுக் கட்சி
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று குறிப்பாக தமிழரசுக் கட்சி போன்று குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் எவரும் ஈராக் அரசாங்கத்துடன் உல்லாசம் அனுபவிக்கவில்லை. பதவிகளை எதிர்ப்பார்க்கவில்லை. சலுகை விலைகளில் வாகனங்களை இறக்குமதி செய்யவில்லை. இதனால்தான் குர்திஸ்தான் சுதந்திர நாடாக மலர்வதற்கு காரணமாக இருந்தது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று ஈராக் நாடாளுமன்றத்தில் கூட குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் பதவி வகிக்கவில்லை எனவும் குர்திஸ்தான் பகுதியை தனிநாடாக்குவதற்குரிய ஏற்பாடுகளையும் குர்திஸதான்; தேசியத்தை நிலைநாட்டுவதிலும் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். குர்திஸ்தான் ஈராக்கில் இருந்து பிரிந்து செல்வதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் விரும்பவில்லை.
உறுதியான தலைவர்கள்
ஆகவே மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான் மக்கள் தங்கள் தேசியத்தையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் சாத்தியப்படுத்தியுள்ளனர். எனவே குர்திஸ் அரசியல் தலைவர்கள் போன்ற விலைபோகாத, சுயமரியாதையான தலைவர்களை தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் சரியாக இனம் காணவில்லை. அவ்வாறான தலைவர்களை இனம் கண்டால் குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தமிழரசுக் கட்சி, போன்ற அற்ப சலுகைகளுக்கு விலைபோகும் அரசியல் தலைவர்களை வைத்துக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி குர்திஸ்தான் சுதந்திர நாடாகச் சென்றது போல தமிழ் ஈழுத்துக்கும் வாக்கெடுப்பு நடத்த முடியும என நம்புவது கற்பனை என்று அரசியல் என்பதுதூன் பலருடைய கருத்து.
3.3பில்லியன் மக்கள்
ஈராக் நாட்டின் குர்திஸ்தான் பகுதியை சுதந்திர நாடாக ஆக்குவதற்கு ஈராக்கின் வடபகுதி மக்களும் அமோக வாக்களித்துள்ளனர். 3.3 மில்லியன் குர்து மற்றும் குர்து அல்லாத வாக்காளர்களில் 92 சதவீதம் பேர் குர்திஸ்தான் பிரிவினையை ஆதரிப்பதாக ஈராக் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை ஈராக் ஜனாதிபதி ஹைதர் அல்-அபாதி அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த வாக்கெடுப்பை தடுக்க முற்பட்டார். பின்னர் வாக்கெடுப்பின் முடிவுகளையும் வெளிவராமல் தடுக்கப்பாடுபடடார். ஆனால் எல்லாவற்றையும் மீறி தேர்தல் திணைக்களம் முடிவை பகிரங்கமாக அறிவித்துள்ளது.
பிரிவினைக்கான பேச்சுக்கள்
எனவே பிரிவினைக்கான பேச்சுவார்த்தையை ஈராக் மத்திய அரசுடனும் அயல் நாடுகளுடனும் குர்து தலைவர்கள் ஆரம்பிக்கவுள்ளனர். ஈராக்கில் உள்ள குர்து அல்லாத இனத்தவர்களின் அமோக ஆதரவு கிடைத்தால்தான் குர்திஸ்தான் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பாக இருந்தது.
ஆனால் குர்திஸ்தான் பிரிந்து செல்வதை ஏனைய சமூகம் ஏற்றுக் கொண்டது போன்று தமிழ்ஈழக் கோரிக்கையை அல்லது தமிழர்களின் சுயாநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு சிங்கள மக்களின் மன நிலை இல்லை. குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அருகில் உள்ள மாகாணங்கள் கூட ஆதரவு வழங்கும் என்று கூற முடியாது. அத்துடன் முஸ்லிம் மக்களும் ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை.
வாக்கெடுப்பு சாத்தியமில்லை
இந்த நிலையில் குர்திஸ்தான் சுதந்திர நாடாக மலர்ந்துள்ளமைக்கு காரணமான வாக்கெடுப்பு இலங்கையில் சாத்தியமில்லை. அப்படியானால் வடக்கு கிழக்கில் மாத்திரம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் அங்குள்ள முஸ்லிம், சிங்கள மக்கள் மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் செல்வாக்குடன் வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெற்று விடும்.
பின்னர் பிரிவினையை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்று சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கம் பிரச்சாரம் செய்ய அது வசதியாக அமைந்து விடும் ஆபத்துக்கள் உண்டு. ஆகவேதான் வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரை கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் நாடாளுமன்ற கதிரைக்குச் செல்ல விரும்புபவர்களை தெரிவு செய்யாமலும் தேசிய இயக்கம் போன்று செயற்படக் கூடிய தலைவர்களை இனம் கண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
நீண்டகால போராட்டம்
மத்திய கிழக்கில் குர்துக்கள் நான்காவது பெரிய மக்கள் தொகையுடைய மரபினம். ஆனாலும் அவர்களுக்கென ஒரு நிரந்தர தேசிய அரசு இல்லை. ஈராக் மக்கள் தொகையில் குர்துக்கள் 15 முதல் 20 சதவீதம் பேர் உள்ளனர். 1991 ஆம் ஆண்டில் இருந்து தங்கள் பகுதிக்கு தன்னாட்சி உரிமை பெறுவதற்கான போராட்டத்தை நடத்தி பல ஆண்டுகளாக ஒடுக்குமுறைகளை குர்துக்கள் சந்தித்தனர்.
ஆனால் குர்திஸ்தான் மக்களை விட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. 1920இல் தமிழ் சிங்கள முரண்பாடு ஆரம்பித்து அஹிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் என 70 ஆண்டுகளுக்கும் மேலான போராட்ட வரலாற்றைக் கொண்டமைந்த தமிழர் போராட்டம் வெற்றியடையாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. 2009ஆம் ஆண்டு மோ மாதத்தின் பின்னர் செயற்பாட்டாளர்களை சரியான வழியில் மக்கள் சீர்ப்படுத்தாத வரை குர்திஸ்தான் வாக்கெடுப்பு போன்று இங்கும் சாத்தியப்படும் என கூற முடியாது.