கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த சேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மும்பையை சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை 2011 ஜுன் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும் அதே ஆண்டு நவம்பர் 18ம் திகதியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவே அமைச்சர் மகிந்த சமரசிங்க அமைச்சரவையில் அது தொடர்பான ஆவணங்களை முன்வைத்திருந்தார்.
பத்திரத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை உத்தேச திட்டத்திற்கு தற்போதுள்ள கேள்வி மனு நடைமுறைகளை ரத்து செய்துவிட்டு புதிதாக கேள்வி கோரப்பட்டு புதிய ஒருவரை நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சேவை தொடர்பாக இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது