குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை நேரில் சந்தித்து , தெரியப்படுத்த உள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடாகவியலாளர் சந்த்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
அனுராதபுர சிறைச்சாலையில், பத்தாவது நாளாக சுலக்ஸன், திருவருள் ,மற்றும் தர்சன் ஆகிய மூவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்று நேரில் சந்தித்தேன். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது, கடந்த மாத இறுதியில் வழக்கை விசாரிக்க திகதியிடப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அனுராதபுர மேலதிக நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
இது வழக்கை மீள் விசாரணை செய்வதற்காகவும் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டால், மொழிப்பிரச்னை ஏற்படும். குற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் விரைவில் வழக்கை முடிக்க முடியும் குறைந்தளவான தண்டனை கிடைக்கும் என கூறி விசாரணைகளை நடத்தாது குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முயல்கின்றனர்.
அனுராதபுரத்திற்கு வழக்கினை மாற்ற வேண்டாம் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பபட்டது. அதனை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் நீதி விதிமுறைக்கமைய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. என குறிப்பிடப்பட்டுள்து.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கருத்தின் பிரகாரம் சிவசக்தி ஆனந்தனும் நானும் தான் இதுவரை சந்தித்து உள்ளோம். வேறு யாரும் வரவில்லை. சிறைச்சாலை அத்தியட்சகர் கூட முன்னர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தால் பலர் வருவார். ஆனால் இப்ப யாரும் சந்திக்க வரவில்லை என ஆதங்கப்பட்டார்.
இது தொடர்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து இது தொடர்பில் கதைக்க உள்ளேன். அதேபோல வடமாகாண முதலமைச்சருக்கும் தெரியப்படுத்த உள்ளேன் என தெரிவித்தார்.