காலநிலை மாற்றத்தினால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் அமுல்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி புரட்சி நாளை (06) ஆரம்பமாகவுள்ளது.
செயற்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் தேசிய ஏர்பூட்டு விழா நாளை முற்பகல் 8.30 மணிக்கு கெக்கிராவ திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும். ஒக்டோபர் 6 – 12 வரையான வாரம் உணவு உற்பத்தி புரட்சியின் ஆரம்ப வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒக்டோபர் 6 ஆம் திகதி தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் விவசாயிகள் தினமாக பெயரிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதைநெல் வழங்குதல், 2000 ஏக்கர் தென்னை மீள்நடுகை, 2017 ⁄ 2018 மகாவலி விவசாய திட்டத்தை பிரகடனப்படுத்தல், வீட்டுத்தோட்ட அபிவிருத்தி விசேட திட்டத்தை ஆரம்பித்தல், மகாவலி வலயத்தில் 2500 காணி உறுதிகளை வழங்குதல், மரநடுகை, புதிய விவசாய தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல், இயற்கை உர உற்பத்தியை மேம்படுதுவதற்கான உபகரங்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் நாடுமுழுவதும் இடம்பெறவுள்ளன.