பாலியல் படுகொலைகளுக்கு மரண தன்டனை தீர்வாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வார இதழில் சமூகத்திற்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டிள்ளது. 70 ஆண்டுகள் அரசியல் போராட்டம் ஒன்றை நடத்திய சமூகம் இன்று பண்பாட்டுப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பது வேதனையானது எனவும் அந்த இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பாதுகாவலன் வார இதழின் ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது.
மரண தன்டனை கிறீஸ்த்தவ பார்வையில் ஏற்புடையதல்ல. பழிக்குப்பழி என்பதை கத்தோலிக்க திருச்சபை நிராகரிக்கின்றது. ஆனாலும் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக யாழ் மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைத்து சமூகத்திற்கும் மகிழ்ச்சியான செய்தி. குற்றவாளிகள் தன்டிக்கப்பட வேண்டும் என எல்லோருமே எதிர்ப்பார்ததிருந்தனர். 18 வயது நிரம்பிய பாடசாலையை மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று மிலேச்சத்தனமான முறையில் பாலியல் பலாத்காரம் புரிந்து கொலை செய்தமை மன்னிக்கப்படக்கூடியல்ல.
அதுவும் வளர்ச்சியடைந்த வெளிநாடு ஒன்றில் இருந்து தாயகப் பிரதேசத்திற்கு வருகை தந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் ஒன்றின் இளவயது பிள்ளைக்கு நடந்த கொடுரம் இனிமேலும் யாருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதை யாழ் மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக சொல்லியிருக்கின்றது.
ஆனாலும் இங்கே மூன்று கேள்விகள் எழுகின்றன. ஒன்று வித்தியாவை உருவாக்கியதும் இந்த சமூகம்தான். வித்தியாவை பாலியல் பலாத்காரம் புரிந்து கொலை செய்தததும் இந்த சமூகம்தான். எனவே இந்த தீர்ப்பின் மூலம் எமது சமூகம் திருத்திவிடுமா? இரண்டாவது பழிக்குப் பழி என்பதை கத்தோலிக்க திருச்சபை நிராகரிக்கின்றது. எனவே மரண தன்டனை தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பம் திருப்பதியடையாது. மூன்றாவது வித்தியா மாத்திலமல்ல எண்ணிலடங்காத பாலியல் பலாத்கார கொலைகள், அது பற்றிய வழக்குகள் கிடப்பில் உள்ளன.
ஆகவே வித்தியா கொலை வழக்கை விசாரணை செய்த யாழ் மேல் நீதிமன்றம் குறிப்பாக கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் திணைக்களம் ஏனைய பாலியல் பலாத்கார வழக்குகளையும் துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். மரண தன்டனை வழங்குவதைவிட குற்றவாளிகள் இனம் காணப்பட்டு சமூகத்தின் முன் அவர்களை அம்பலப்படுத்தினாலே போதும். அதேவேளை நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் தன்டனை கொடுக்கப்பட்டு சமூகத்தை திருத்தலாம் என நினைப்பதும் தவறு. வித்தியா விடயத்தில் நீதிமன்றம் தனது கடமையை சரிவர செய்துள்ளது.
ஆனால் சமூகத்தில் உள்ள பொது அமைப்புகள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் ஆகியோருக்கும் பொறுப்புள்ளது. சமூக வன்முறைகளை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத் திட்டங்களை தனியே நீதிமன்றங்களிடம் ஒப்படைத்துவிட்டு இருக்கக்கூடாது. அரசியல் உரிமைப் போராட்டத்தையும் இப்படித்தான் தனி ஒரு இயக்கத்திடம் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
சமூக வன்முறைகளை தடுக்கக்கூடிய கல்வி முறை குறைந்தளவில் என்றாலும் எமது பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வியும் சமூக அக்கறையுடன் கூடிய தொழிற்கல்வியும் ஆரம்ப முதலே உள்ளன. இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்தான் அவ்வாறான தரத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
எமது பாடத்திட்டம் அறிவுசார்ந்த பாடத்திட்டம்தான். ஆனால் பரீட்சையை மாத்திரமே நோக்கமாக் கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். பாடத்திட்டத்தையும் தாண்டி ஆசிரியர்கள் சமூக விழுமியங்களை போதிக்கலாம். அது குறித்து கல்வியாளர்கள் கவணம் செலுத்த வேண்டும். அதேவேளை பெற்றோரும் தமது பிள்ளைகளை ஆலயங்களில் நடைபெறும் சமய வகுப்புகளுக்கு ஒழுங்கான முறையில் அனுப்புவதில்லை. எவ்வாறாயினும் சமூக வன்முறைகளை முற்றாகவே இல்லாமல் செய்யவது என்பது கடினமானதுதான்.
ஆனாலும் 70ஆண்டுகால அரசியல் போராட்டம் ஒன்றை கண்ட தமிழச் சமூகம் இயல்பாகவே சமூக விழுமியங்களை பேணவேண்டும். ஏனைய ஆசிய நாடுகளில் அல்லது தென்பகுதியில் இடம்பெறும் கலாச்சார சீர்கேடுகள், சமூகவிரோத செயற்பாடுகளைப் போன்று தமிழர் பிரதேசங்களிலும் அவ்வாறு இடம்பெற்றக்கூடாது. வித்தியாவுக்கு நேர்ந்த அவலம் தமிழ்ச் சமூகத்தை வெட்கித் தலைகுணிய வைத்துள்ளது. இதுவரைகாலமும் படையினர்தான் அவ்வாறு செய்தார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகம் தமக்குள்ளேயே இவ்வாறான கொடூர குணங்களைக் கொண்டுள்ளது என ஏனைய சமூகத்தினர் பேசும் அளவுக்கு இழி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தனியே நீதிமன்ற தீர்ப்புக்களை மாத்திரம் நம்பியிருக்காது அரசியல் உரிமையை கோரி நிற்கும் தேசிய இனம் என்ற உணர்வுடன் முதலில் எம்மத்தியில் தீயாக பரவி வரும் சமூகவிரோத குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக் மூடிய வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பியுங்கள்.