இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அணு ஆயுதங்களை சேமித்து வைக்க பூமிக்கடியில் புதிய சுரங்கப் பாதைகளை அமைக்க உள்ளதாக பிரபல செய்தி தொலைக்காட்சியான வியோன் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த சுரங்கங்கள் டெல்லிக்கு அருகில் பாகிஸ்தானின் மியான்வாலி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளதால் இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மியான்வாலி பகுதி அமிர்தசரசிலிருந்து 350 கி.மீ. தொலைவிலும், புதுடெல்லியிலிருந்து 750 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 140 அணு ஆயுதங்களையும் சேமித்து வைப்பதற்காக பூமிக்கடியில் இந்த புதிய அணுஆயுத கிடங்கை அமைக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக வியோன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மூன்று சுரங்கப்பாதைகள் கொண்ட இந்த சேமிப்பு கிடங்கு 10 மீட்டர் உயரம் மற்றும் அகலம் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வோரு சுரங்கப்பாதையிலும் 12-லிருந்து 24 வரையிலான அணு ஆயுதங்களை சேமித்து வைக்க முடியும் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்கப்பாதைகளிலிருந்து ஆயுதங்களை கொண்டு செல்லும் வழியில் அகண்ட வீதிகள் அமைக்கப்பட உள்ளன. உள்ளே செல்வதற்கு மற்றும் வெளியே வருவதற்கு என தனி தனி வீதிகள் அமைப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.