குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாட்சிகளிற்காக வழக்குகளை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது தவறு என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவில் இடம்பெற்ற நிலையில் அதனை அனுராதபுரத்திற்கு மாற்றியது சரியானதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குற்றஓப்புதல் வாக்குமூலங்கள் மிககேவலமான சாட்சியங்கள் என ஏற்கனவே பல நீதிபதிகளால் கணிக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற ஓப்புதல் வாக்குமூலங்களை மட்டும் வைத்து கைதிகளை குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களிற்குமாற்றுவது உசிதம் என அரசு கருதியதன் விளைவே 3 அரசியல் கைதிகளின் வழக்குகளுமட மாற்றப்பட்டமைக்கான காரணம் என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்கைதிகள் அனைவரும் உடனடியாக பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பொதுவான கோரிக்கை காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடையது ஜெனீவாவில் பல வருடங்களிற்கு முன்னரே அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்துள்ள போதிலும் அதனை இன்னமும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனடியா விடுதலை செய்யுங்கள் என கோருவது இலகுவான விடயமாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.