குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வங்கிகளை கொள்ளையிடுவதில் ஐக்கிய தேசியக் கட்சி சாதனை படைத்துள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். பொருளாதாரத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத ஐக்கிய தேசியக் கட்சி, வங்கிகளை கொள்ளையிடுவதில் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிணை முறிகளை விநியோகம் செய்யுமாறு பிரதமரே தமக்கு ஆலோசனை வழங்கியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் சாட்சியமளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நண்பர் ஒருவரே தாய்வான் வங்கியில் அண்மையில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.