192
ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதுவுமில்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்க போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில்.இன்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஜனாதிபதி எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து இருந்தார். எங்களை பொறுத்த வரைக்கும் ஜந்திபதியுடன் பேசுவதற்கு எதுவும் இல்லை. தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழக்கும் தருவாயில் உள்ளார்கள். தமிழ் அரசியல் கட்சிகள் ஆகிய நாங்கள் கேட்பது அனைத்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனைகள் இன்றி விடுவிக்க வேண்டும். என்பதே .
ஆனால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் கோருவது , வவுனியாவில் நடைபெற்று வந்த வழக்கினை தொடர்ந்து வவுனியாவில் நடத்த வேண்டும் எனவும் , அனுராதபுரத்திற்கு மாற்ற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு ஒரு காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் , இங்கே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுடன் வீதியில் இறங்கி வந்து கதைத்தது வெறுமனே தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு , தமிழர்கள் எனக்கு எதிராக போராடுகின்றார்கள் நான் ஒரு வீரன் இங்கே வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கதைத்தார். அதற்கு இங்கே இருந்த சிலர் துணை போயுள்ளனர்.
இங்கே பேசுவதற்கு எதுவும் இல்லை அவர் தான் எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டியது தான் பேசுவதற்கு எதுவும் இல்லை. எங்களின் போராட்டம் தொடரும் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்க மாட்டோம். அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சர்வதேசத்திற்கு உறுதி அளித்து விட்டு சட்டத்தை இன்னமும் நீக்காது , அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் தொடர்ந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். எனவே இதில் பேசுவதற்கு எதுவுமில்லை. முடிவெடுக்க வேண்டியது அரசாங்கமே என மேலும் தெரிவித்தார்.
Spread the love