குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியுடன் , அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது தொடர்பில் பலர் பல தடவைகள் ஜனாதிபதியிடம் எடுத்து கூறி விட்டனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில்.இன்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி எங்களை சந்தித்தார். அவருடன் பேசினோம் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் மூன்று அரசியல் கைதிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் உடல் நிலை மிக மோசமடைந்து செல்கின்றது.
கடந்த காலத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் , அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு உள்ளது. அதனை மாற்ற வேண்டாம் என கோரிக்கை வைத்தே அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஜனாதிபதி அது தொடர்பில் தலையீட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரினோம். அவர்களின் உடல் நிலை தொடர்பிலும் அவரிடம் தெரிவித்தோம்.
அது தொடர்பில் கலந்துரையாடுவோம் என எமக்கு ஜனாதிபதி பதிலளித்தார். எம்மை பொறுத்த வரை இது கலந்துரையாடலுக்கான நேரமில்லை. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் உடல்நிலை மிக மோசமடைந்து வருவதனால் , அவர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜனாதிபதிக்கு அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் பல தடவைகள் பலர் அறிவித்து விட்டார்கள். ஆகவே நாமும் கலந்துரையாட வேண்டிய தேவையில்லை.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.