Home இலங்கை மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரின் கீழ், பாரிய நில அபகரிப்பு – சம்பந்தருக்கோ கூட்டமைப்பிற்கோ தெரியாது:-

மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரின் கீழ், பாரிய நில அபகரிப்பு – சம்பந்தருக்கோ கூட்டமைப்பிற்கோ தெரியாது:-

by editortamil

மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரின் கீழ், பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ, மாகாண சபை உறுப்பினர்களுக்கோ எதுவும் தெரியாது எனவும் மட்டக்களப்பு கல்லடியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

மதுரோயா திட்டம் என்பது மகாவலி திட்டத்தின் கீழ், நீண்ட காலமாக உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே மகாவலி திட்டத்தின் கீழ் இடதுகரை வாய்க்கால், வலதுகரை வாய்க்கால் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

இடதுகரை வாய்க்கால் என்பது ஏற்கனவே புனரமைக்கப்பட்டு அரளகன்வில போன்ற பொலன்னறுவை மாவட்டத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளடக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

வலதுகரை வாய்க்கால் என்பது தொப்பிகல பிரதேசமாகும். மகாவலி அபிவிருத்தி சபை எதுவித தகவல்களையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்காமல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்பொழுது அதை அமுலாக்குவதற்கான இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

இதற்காக, கிரான் பிரதேச சபைக்குட்பட்ட நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு உள்வாங்கப்படவிருப்பதால், பாரிய பாதிப்புகள் ஏற்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார் அத்துடன் செங்கலடி, ஈரளக்குள பிரதேசங்களும் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவிருக்கின்றன. மொத்தமாக 15500 ஹெக்டெயர் நிலப்பரப்பு இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளன. இதற்காக சீன வங்கியில் பணம் பெறப்பட்டு சி.எம்.சி என்ஜினியரிங் என்ற கம்பனிக்கு ஒப்பந்தமும் வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரோயா திட்டத்தில் நீரின் கொள்ளளவு 597 எம்.சி.எம் ஆகும். வாகனேரி குளத்தில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் நீரை கேட்டாலும் அவர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி நீரை வழங்க மாட்டார்கள். இவ்வாறு நீர்ப் பற்றாக்குறை இருக்கும் தருணத்தில் இத் திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவார்கள் என்பது புரியவில்லை. ஆகவே முற்று முழுதாக நில அபகரிப்பிற்காக அமுல்படுத்தப்படுகின்ற திட்டமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இத் திட்டத்தினூடாக தொப்பிகல பிரதேசத்தில் 11, 800 குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும். இவற்றில் விவசாய குடும்பங்கள் 9000. விவசாய குடும்பங்கள் அல்லாதோர் 2800 ஆகும்.

மகாவலி அதிகார சபையின் ஆய்வின் படி, தற்போது அங்கு வாழ்கின்ற மக்கள் தொகை 2883 என குறிப்பிட்டிருக்கின்றார்கள். 887 வீடுகளும் 775 குடும்பங்களும் அங்கு வாழ்கின்றனர். 775 குடும்பங்களே அங்கு இருக்கின்றன என்றால் குடியேற்றப்படவிருக்கின்ற 11800 குடும்பங்களில் மிகுதி யார் என்ற கேள்வி அங்கு பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய கணக்கெடுப்பின் படி, 575 ஏக்கர் மேட்டு நிலம் பயிர் செய்பவர்களுக்குத் தான் ஆவணங்கள் இருக்கின்றன என்றும் 2169 ஏக்கர் விவசாய நிலங்களுக்குத் தான் அத்தாட்சிப் பத்திரங்கள் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஏனைய காணிகளுக்கு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை என்றும் அங்கு பயிர் செய்யப்பட்டிருக்கின்ற காணிகள் கையகப்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அதிகாரிகள், விவசாய ஆணையாளர்கள் ஊடாக ஆவணம் வழங்கப்பட்டு தற்போது தொப்பிகல பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டிருக்கின்ற காணிகளின் அளவு 13638 ஏக்கர் ஆகும். ஆனால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்வின்படி, 2169 ஏக்கர் காணிகளே ஆவணம் வழங்கப்பட்டு பயிர் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றார்கள். இங்கு எழப்போகின்ற பெரிய பிரச்சினை என்னவெனில் 16382 ஏக்கர் காணிகளில் தற்போது எமது மக்கள் பயிர் செய்திருக்கின்றார்கள். இதற்கு ஆவணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 13638 ஏக்கர் காணி இத் திட்டத்தினூடாக பறிபோகப் போகின்றது. இத் திட்டத்தினூடாக பல ஏக்கர் நிலங்கள் பறிபோகப் போகின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்கெடுப்பின் படி, தொப்பிகல பிரதேசத்தில் நிரந்தரமாக 986 சிங்கள குடும்பங்கள் வசிப்பதாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாது. இருக்கின்ற தமிழ்க் குடும்பங்களை விட சிங்கள குடும்பங்கள் அங்கு கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து இத்திட்டத்தை பாரிய நில அபகரிப்பிற்கான திட்டமாக கருத முடியும்.

காணி அபகரிப்பு செய்யப்படவுள்ள இடங்கள் வன இலகாவுக்கு சொந்தமானது, அங்கு மிருகங்கள் வாழும் பகுதியாகும். இவற்றிற்கான அனுமதிப் பத்திரங்கள் உரியமுறையில் பெறப்படவில்லை. கிட்டத்தட்ட 41 தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் கொண்டுவரப்படுவதனால் 18 தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகின்றது.

13638 ஏக்கர் நிலம் பறிபோகப் போகின்றது. 11000 குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும். இதில், 775 தமிழ் குடும்பங்களே அப் பகுதியில் இருக்கின்றது. 996 சிங்கள குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் மிகுதியாகவுள்ள குடும்பங்கள் எங்கிருந்து வரப்போகின்றது என்ற கேள்வியெழுந்துள்ளது. மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக இரண்டரை ஏக்கர் காணி விவசாயத்திற்கும் கால் ஏக்கர் காணி வீட்டு பயிர் செய்கைக்காகவும் வழங்கப் போகின்றனர்.  இது தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள புத்திஜீவிகளுக்கு தெளிவினை ஏற்படுத்தியுள்ளோம். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விழிப்படைய வேண்டும். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால் நிலங்கள் பறிபோவதை யாரும் தடுக்க முடியாது. இதில் வேடிக்கையென்னவென்றால் தொப்பிக்கலை பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமோ, பிரதேச செயலாளர்களிடத்திலோ வேறு உத்தியோகத்தர்களிடமோ எதுவித தரவுகளும் பெறப்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எழுந்தமானமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2016ம் ஆண்டு ஆய்வறிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கே இது தொடர்பில் எதுவும் தெரியாது. இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு தற்போது அமுலாக்கத்திற்கு வந்துள்ளது. நான்கு வருடத்திற்குள் அமுலாக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது. இதன் காரணமாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதி மக்கள், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, கிரான், கிண்ணையடி, கருவாக்கேணி ஆகிய பகுதி மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளப் போகின்றனர். அப் பகுதியில் 120,000 மாடுகள் மேய்ச்சல் தரைக்காக பயன்படுத்தப்படுகின்றது. இந்த திட்டத்தில் மேய்ச்சல் தரை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. திட்டம் வரும் போது மேய்ச்சல் தரை அனைத்தும் அவர்களினால் பலவந்தமாக கையகப்படுத்தப்படும். இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் போது தமிழ் மக்களின் 16382 ஏக்கர் காணிகளும் அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். வழங்கப்பட்டு இந்த திட்டம் வருமானால் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் மீள்குடியேற்றம் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்களின் தொகை குறைவாகவே உள்ளது. ஆனால் பெரும்பான்மை மக்களை கொண்டு வந்து குடியேற்றி கல்குடா பிரதேசத்தில் தமிழர்களின் வீதாசாரத்தினை முற்றுமுழுதாக குறைப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்படுகின்றது. இதில் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் கல்குடா தொகுதியை முற்றுமுழுதாக இழக்கவேண்டிய நிலையேற்படும்.

இதேவேளை கோறளைப்பற்று மத்திய பிரதேச சபையினை பிரித்து ஒன்றுடன் வாகனேரி மற்றும் புனாணை மேற்கை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனை பாரிய சதித்திட்டமாக நாங்கள் பார்க்கின்றோம். அதேபோன்று காத்தான்குடியை மாநகரசபையாக மாற்றி ஆரையம்பதி மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில பகுதிகளை இணைத்து தனி பிரதேச சபை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை எமது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

மகாவலி வலது வாய்க்கால் திட்டம் தொடர்பிலும் பிரதேசபைகள் பிரிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம். கிரான் பிரதேச செயலகம் என்பது தேவையான விடயம். அங்கு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஏற்கனவே பாரிய நிலப்பரம்பலுடன் உள்ள வாழைச்சேனை பிரதேசசபையுடன் கிரான் பிரதேசம் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதேச சபையினை நகரசபையாக நாங்கள் மாற்ற வேண்டும். நான் பாராளுமன்றத்தில் இருக்கும் போது கூட அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். இவற்றினையெல்லாம் விடுத்து காத்தான்குடியையும் கோறளைப்பற்று மத்தியையும் பிரிக்க நினைப்பது எமது நிலங்களை சூறையாட மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே பார்க்கின்றேன்.

இன்று வாகனேரி பகுதி மக்கள் பல பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். வாகனேரி என்பது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம். வாகனேரி குளத்தினையே அங்குள்ள பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இன்று அங்கு நிலங்கள் பறிக்கப்பட்டு வேற்று மதங்களின் மதத்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாகனேரி குளத்தின் அரைவாசி பகுதியை தங்களுக்கு மீன்பிடிக்க தரவேண்டும் என ஓட்டமாவடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டமாவடி எங்குள்ளது வாகனேரி எங்குள்ளது. அங்குள்ள மக்களிடம் எவ்வாறு இவர்கள் கோரிக்கை விடுக்கமுடியும். இதுபோன்ற பல ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கையெடுக்காவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நிலப்பரப்பினை இழக்கவேண்டிய நிலையேற்படும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் படிப்படியாக முன்னெறிவரும் நிலையில் இதனை தடுக்காவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு மேலும் வறுமையான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையேற்படும் என விநாயகமூர்த்தி முரலீதரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More