இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தி உத்தரவாதமளிக்கும் அரசியலமைப்பொன்றே தற்போது நாட்டிற்கு தேவை என கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
ஆகவே ஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா என்ற விவாத்திற்கு அப்பால்சென்று தற்போது தமக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா எனவும் அனைத்து இனங்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கப்படும் வகையிலான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்ற விவாதங்களுக்கு சமூகம் முன்வரவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது உத்தேச அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்தாடல் குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்,
தற்போது சில அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள ஒருமித்த நாடு என்ற பத்த்தை முன்வைத்து பாரிய குழப்பங்களை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்,
இதனூடாக பெரும்பான்மை மக்களை குழப்பி உத்தேச அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமாயின் அதனை தோற்கடித்து நாட்டில் தொடர்ச்சியாக சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்குமான பிரச்சினைகளை நீடிக்கச்செய்து அதில் தமது அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு சில குழுக்கள் முயற்சித்துக்கொண்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களுடன் இணைந்து சில சிறுபான்மையின அரசியல்வாதிகளும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பில் கூறப்படாத வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை கூறி மக்களுக்கு இடையே வீணாண பிரச்சினைகளை உருவாக்கி சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைப்பதை விரும்பாத பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு துணைபுரிந்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே சிறுபான்மை சமூகம் இந்த ஒருமித்த என்ற பதத்திற்குள் முஸ்லிம் சமூகத்தின் சுய கௌரவத்துடனான இருப்பு குறித்த கேள்விகள் இருக்கின்றன, புதிய அரசியல் யாப்பு வரையப்பட முன்னர் அது குறித்த விடயங்களை நாம் தமிழ் தலைமைகளுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்குள் வரவேண்டிய தேவையும் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதுடன் ஆளுனர் தெரிவில் குறித்த மாகாண மக்களுடைய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளும் உள்ளடக்கப்படவேண்டும்,
அத்துடன் தேர்தல் முறை சீர்த்திருங்களிலும் முஸ்லிங்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் குறித்து கூடுதல் கரிசனைசெலுத்தப்படவேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.