முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு, செலவுத் தொகையுடன் முதல் நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தன்னை அமைச்சர் அவையில் இருந்து நீக்கியது தவறு எனத் தெரிவித்து, முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன், முதலமைச்சருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் தெஹிதெனிய, நீதியரசர் அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வழக்கை நடாத்தக் கூடிய சட்ட ரீதியான காரணங்கள் எதுவுமே இல்லை எனக் கூறி முதலமைச்சருக்கு அறிவித்தல் கொடுக்காமல், செலவுத் தொனை அடங்கலாக முதல்நிலையிலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
டெனீஸ்வரனின் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோவும், வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிடெல்லுடன் ஜனாதிபதி சட்டத்தரணிஎம் ஏ சுமந்திரனும் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.
முதலமைச்சர் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் சட்டத்தரணி ஜெயக்குமாருடன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனும் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இந்த வழக்கில் அமைச்சர்களை நியமிப்பது ஆளுநருக்கே உரித்தான அதிகாரம் என்றும் முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என டெனீஸ்வரன் சார்பில் வாதிடப்பட்டது. இதே கருத்தை வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் சார்பிலும் அவருடைய சட்டத்தரணிகள் வாதிட்டனர். எனினும் அந்த வாதங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.