குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் அனைத்து மக்களினதும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகி நாம் அனைவரும் இலங்கையர் என்று வாழும் நிலை தோன்ற வேண்டும் என இந்நாளில் இறைவனை பிராத்திப்பதாக வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் தீபாவளித் திருநாளில் இன்று உலங்கெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம் கிருஷ்ணரின் லீலைதான் என்பது யாவரும் அறிந்ததே! உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றி பெறுகிறார் கிருஷ்ணன் ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கின்றார் கிருஷ்ணன்
இந்த இதிகாசத்தினை உதாரணமாக கொண்டு இலங்கைத் திருநாட்டில் வாழும் ஏனைய இனத்தவரும் தமிழ் மக்களின் தீபத்திருநாளை தமிழ் மக்களோடு இணைந்து கொண்டாடவேண்டும். இதேபோன்று வெசாக், நத்தார் பண்டிகைகளையும் மூவின மக்களும் ஒன்றாக தேசிய ரீதியில் கொண்டாட வேண்டும் என இந்நாளில் நான் வலியுறுத்தி நிற்கின்றேன்.
எம்மிடையே இன,மத, மொழி பேதங்கள் இல்லாது ஐக்கியப்பட்டு வாழ்வதற்குரிய வழிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும், ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்கள் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் பழக்கத்தினை நாம் அனைவரும் ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். அதன் மூலமே வன்முறையற்ற சமூகம் ஒன்றினை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.