இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சீனி மற்றும் சீமெந்து கைத்தொழில் துறையில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு பாகிஸ்தான் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இருதரப்பு அரசியல் மாநாட்டின் 5 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்காக வருகை தந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் தெஹ்மினா ஜானுவா ( Tehmina Janjua ) வை இன்று (17) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்த போதே மேற்படி அழைப்பை விடுத்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகால நட்புறவு நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அந்த உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த போர்க்காலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய அர்ப்பணிப்புமிக்க ஒத்துழைப்புக்காகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் வழங்கும் ஒத்துழைப்புகளுக்காகவும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை சார்பில் செயற்படுவதற்கு கிடைத்த வாய்ப்பு தொடர்பில் மகிழ்ச்சியடைவதுடன், இலங்கையின் சமாதானம், இறைமை மற்றும் அபிவிருத்திக்காக வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு உற்சாகமளித்து கால்நடை பண்ணைகள் மற்றும் பால் உற்பத்திக்காக உதவி வழங்க பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.