மனிதர்களது ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே இன்று சமூக முன்னேற்றத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது. எமது நாட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை போதிப்பதற்கு முன்னதாக ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும் போது பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் போதிக்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் சித்தியடையும் போது மகிழ்ச்சியடையும் அதேவேளை பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் மிகவும் மோசமாக அவர்களை துன்புறுத்துவதில் பெரும்பாலான பெற்றோர்கள் ஈடுபடுகின்றனர். பெறுபேறு கிடைக்கும் நாள் நெருங்கும் போது பிள்ளைகள் பெரும் அச்சத்துடன் இருப்பதனையும் காணமுடிகிறது.
பிள்ளைகளுக்கு கற்பிப்பது போன்றே பரீட்சை பெறுபேறு வெளிவந்த பின்னர் பிள்ளைகளுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பில் பெற்றோரை தெளிவுபடுத்தும் செயற்திட்டங்கள் அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
இன்று எமது நாட்டிலுள்ள சமூக பிரச்சினைகள் பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது. பொருளாதாரப் போட்டிமிக்க உலகுக்கு பிள்ளைகளை தயார்செய்வது ஒரு சவாலாகவே உள்ளது. சமூகத்தில் வேகமாக பரவிவரும் போதைப்பொருட்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். ஒரு காலத்தில் நகர்ப்புறங்களிலிருந்த பிரச்சினைகள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இப்போது கிராமப்புறங்களிலும் பரவியுள்ளன.
பிள்ளைகள் பாடசாலை நேரத்திலேயே பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். பாடசாலைக்கு வெளியே பெற்றோரின் பொறுப்பில் இருக்கும் காலத்திலேயே பிள்ளைகள் பாதுகாப்பில்லாமல் இருப்பது தெரிய வருகிறது. தொழில்நுட்பம் காரணமாக உலகம் முன்னேறியிருந்தாலும் மனிதனால் கட்டுப்படுத்த முடியாத பல விடயங்கள் இன்னமும் இருக்கின்றன என ஜனாதபதி தெரிவித்தார்.