குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு 4ஆயிரத்து 999 பேர் உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , இந்த வருடத்தில் 4பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளனர் எனவும் யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.குடாநாட்டில் உள்ள 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் கீழ் டெங்கு நோய் பரவியுள்ளன. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிசைக்கு செல்லுமாறும் , தாமதிக்கப்பட்ட சிக்கிச்சை காரணமாகவே 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை டெங்கு நுளம்புகளின் பெருக்கம் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதிலும் , அண்மையில் யாழில் பெய்த மழை காரணமாக மீண்டும் நுளம்பு பெருக்கம் அதிகரித்து உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 259 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு , சிகிச்சை பெற்றுள்ளனர். எனவும் தெரிவித்தனர்.
அதேவேளை வடமாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் தான் டெங்கு காய்சலுக்கு உள்ளானவர்கள் அதிகமாக இனம் காணப்பட்டு உள்ளனர். கிளிநொச்சியில் 444 பேரும் , மன்னாரில் 508 பேரும் , வவுனியாவில் 761 பேரும் மற்றும் முல்லைத்தீவில் 296 பேரும் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என இனம் காணப்பட்டு உள்ளனர் என வடமாகாண சுகாதர அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.