யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் யாழ் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் சென்ற நோர்வேக்கான தூதுவர் மற்றும் அவரது குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். நோர்வே அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேறிய மக்களுக்கான திட்டங்களைப் பார்வையிடுவதற்காக சென்ற நோர்வே தூதுவர் மற்றும் அதிகாரிகள் குறித்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மைக் காலங்களில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றியும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கினைத் தவிர்ந்த அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேச மக்களுக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதற்கு சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தூதுவர் உறுதியளித்துள்ளார் எனவும் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்ததுடன், மயிலிட்டி துறைமுகம் மற்றும், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி மீனவ குடும்பங்களை சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்தும் நோர்வே தூதுவர் குழுவினர் ஆராயவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.