சைற்றம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்வு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (19) பிற்பகல் அக்வினாஸ் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சைற்றம் நிறுவனம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த காலத்தில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும் அத்தீர்வுகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எவ்வாறான போதும் அடுத்தவாரம் அரசாங்கம் வெளியிடும் இறுதித் தீர்வு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் உள்ளிட்ட எதிர்ப்புகளை வெளியிட்ட பெரும்பாலானவர்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய உற்பத்திப் பொருளாதாரத்திற்கு தேவையான கற்றவர்களை உருவாக்குகின்ற போது அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கும் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுக்கும் பொறுப்புள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கல்வியில் இருக்கவேண்டிய நியமங்கள் மற்றும் பண்புகளைப் பாதுகாத்து அந்த அனைத்து நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.