குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தந்தையாக நினைத்து கேட்கிறேன் , என் அண்ணாவின் வழக்கை வவுனியா மேல் நீதிமன்றில் நடத்த நடவடிக்கை எடுங்கள் என அரசியல் கைதியின் சகோதரி ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் பேச்சுக்களை நடத்தி இருந்தனர்.
அதன் போது ,யாழ்.பல்கலைகழக மாணவியும் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தமிழ் அரசியல் கைதியான மதியரசன் சுலக்சனின் சகோதரியும் , ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அதன் போது , எங்கள் குடும்பத்தில் அப்பா இல்லை. அண்ணா தான் குடும்பதலைவராக குடும்பத்தை பார்த்தவர். அவரை உடனடியாக விடுவிக்காவிட்டாலும் , அவர் கோருவது போன்று வவுனியா நீதிமன்றில் வழக்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உங்களை தந்தையாக நினைத்து கேட்கிறேன் என கண்ணீர் மல்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் நாட்டில் இல்லை அவர்கள் நாடு திரும்பியதும் அவர்களுடன் கலந்தாலோசித்து எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக நல்லதொரு முடிவினை தெரிவிப்பதாக ஜனாதிபதி மாணவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.