டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திய இனம்தெரியாத நபரினால் யாழ்.திருநெல்வேலி பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
திருநெல்வேலிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனம் தெரியாத நபர் ஒருவர் தன்னை டெங்கு ஒழிப்பு பிரிவைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டு வளவுகளுக்குள் புகுந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டு உரிமையாளர்களின் பெயர் விபரங்களை தான் கொண்டு வந்திருந்த கோவையில் (பையில்) பதிவு செய்துகொண்டார்.
இவ்வாறாக ஒரு சில வீட்டு வளவுகளுக்குள் அத்துமீறி உள்நுழைந்து சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டமையால், வீட்டு உரிமையாளர் ஒருவர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு எந்த பிரிவில் இருந்து வருகின்றீர் என வினாவிய போது, தான் யாழ்.மாநகர சபை டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அறிமுகம் செய்துள்ளார்.
அதன் போது வீட்டு உரிமையாளர் இந்த பகுதி நல்லூர் பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதி எவ்வாறு நீங்கள் இந்த பிரிவுக்குள் சோதனையிட முடியும் எனவும் அதுமாத்திரமின்றி, போலீசாரோ வேறு ஊழியர்களோ இல்லாமல் தனியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ரீரோ என வினாவிய போது , தன்னை நல்லூர் பிரதேச சபை தான் அழைத்ததாக கூறி அங்கிருந்து நழுவி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். குறித்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் பதட்டம் உருவாகி இருந்தது.