Home இலங்கை சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்”

சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்”

by editortamil

இலங்கையின் விளையாட்டுத்துறைசார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி.மகாலிங்கம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்தவர். விளையாட்டுத் துறையோடு பொலிஸ் துறையில் இணைந்துகொண்ட இவர் எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கி 1966 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

விளையாட்டுத்துறையில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், நீளம்பாய்தல், உயரம் பாய்தல் என பல்வகை ஆளுமை கொண்டவர். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார். பொலிஸ் துறையில் இணைந்தபோதும் தனது விளையாட்டுத்துறைமீதான ஈடுபாடுகளைக் குறைத்துக்கொள்ளாத இவர் மரணிக்கும்வரை இலங்கையில் புகழ்பூத்த விளையாட்டு வீரராகவே திகழ்ந்தார்.

வி.ரி.மகாலிங்கம் 1943 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் திகதி தம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். ஆறு சகோதரர்களுடனும் ஒரு சகேதரரியுடனும் எண்மரில் ஒருவனாய் மகாலிங்கம் வாழ்ந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை நாவலர் பாடசாலையில் கற்ற இவர் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இணைந்துகொண்ட இவர் விளையாட்டுத்துதுறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி கல்லூரிக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார்.

கல்வியில் மட்டும் கோலோச்சியிருந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத்துறையிலும் புகழைத் தேடிக்கொள்வதற்கு மகாலிங்கத்தின் பங்கு அளப்பரியது. யாழ்ப்பாணம் இந்துவின் விளையாட்டுப் போட்டிகளிலும் யாழ்ப்பாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளிலும் கனிஷ்ட பிரிவின் முதல் வெற்றியாளன் மகாலிங்கம்தான்.

அதன் பின்னரான காலபகுதியில் மத்தியகல்லூரியில் இணைந்துகொண்ட போதும் அங்கும் அவர் விளையாட்டுத்துறையை விட்டுவைக்கவில்லை. விளையாட்டுத்துறையில் சகல பிரிவுகளிலும் சளைக்காமல் சாதனை நிகழ்த்தினார். 1959 இல் யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டுச் சங்க போட்டிகளில் மத்தியகல்லூரி அணிக்கு தலைமைதாங்கிய இவர் வெற்றிக் கனியைப் பறித்துக்கொடுத்தார். 1961 ஆம் ஆண்டிலும் யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டுச் சங்க போட்டிகளில் மத்தியகல்லூரி அணிக்கு தலைமை தாங்கிய இவர் சிரேஸ்ட பிரிவில் முதல்நிலை வீரராகத் தெரிவாகியதோடு அரிய சாதனைக்காக வழங்கப்படுகின்ற விருதினையும் பெற்றுக்கொண்டார்.

தனது கல்லூரிக்காக மகாலிங்கம் செய்த சாதனைகளில் பெரிய சாதனை கல்லூரி அணிகளுக்கு தலைமை தாங்கியது மட்டுமன்றி 1962 ஆம் ஆண்டு இலங்கை ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் நீளம் பாய்தலிலும் உயரம் பாய்தலிலும் அவர் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறலாம். இவரது இச் சாதனைக்காக அகில இலங்கை கல்லுரிகளின் போட்டிக் குழுவினரால் வர்ண விருது இவருக்கு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியின்போது நீளம் பாய்தலில் 21 அடி ஆறரை அங்குலம் நீளம் பாய்ந்து இலங்கைச் சதனை ஒன்றை தன்வசப்படுத்தினார்.

இத்தோடு மட்டுமன்றி இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் இவர் ஈட்டிய சாதனைகளைக் கௌரவித்து கொழும்புக்கு வெளியே உள்ள கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்ற “தார்பற்” வெற்றிக்கிண்ணத்தை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி முதல்முறையாக தனதாக்கிக்கொண்டது.

1962 ஆம் ஆண்டு இலங்கையின் பிரபல விளையாட்டுக் கழகமாகத் திகழ்ந்த இலங்கை வழிவயற் கழகத்தினர் இவருக்கு இலங்கையின் சிறந்த கனிஷ்ட விளையாட்டு வீரர் என்ற கௌரவத்தை வழங்கினர். 1963 இல் யாழ்ப்பாணம் ஏஏஏ (AAA) விளையாட்டுப் போட்டியில் நீளம்பாய்தலில் சாதனை ஒன்றினை நிலைநாட்டினார்.  நீளம் பாய்தலிலும் உயரம் பாய்தலிலும் இவர்பெற்ற சாதனைகளினால் 1964 ஆம் ஆண்டு இவர் இலங்கையின் தேசிய வீரராகும் கௌரவத்தினைப் பெற்றுக்கொண்டார்.

மெய்வல்லுனர்ப் போட்டிகளோடு மகாலிங்கத்தின் சாதனைகள் முற்றுப்பெற்றிருக்கவில்லை. துடுப்பாட்டத்திலும் உதைபந்தாட்டத்திலும் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்குப் பெருமை தேடிக்கொடுத்த வீரராக அவர் திகழ்ந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரியின் கிரிக்கெட் அணிக்கு மட்டும் மகாலிங்கம் தலைவரல்ல. யாழ்ப்பாண கல்லுரிகளின் கிரிக்கெட் அணிக்கும் மகாலிங்கம்தான் தலைவர். 1963 ஆண்டு யாழ்ப்பாண பாடசாலைகளின் கிரிக்கெட் அணிக்குத் தலைமைதாங்கிய அவர் கொழும்பு பாடசாலைகளுக்கிடையிலான அணிக்கு எதிராகக் களமிறங்கி 89 ஓட்டங்களால் யாழ்ப்பாண பாடசாலைகள் அணியை வெற்றிபெறச்செய்தார்.

அன்றைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த டேவல் லீவரெஸ் மற்றும் சரத்விமலரத்தின என்பவர்களுடன் விளையாடினார்.
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் உதைபந்தாட்ட அணியில் தன்னை இணைத்துக்கொண்ட மகாலிங்கம் உதைபந்திலும் உச்ச புகழைப் பெற்றுத்திகழ்ந்தார். 1962, 1963 ஆம் ஆண்டுகளில் கல்லுரியின் அணியில் விளையாடிய அவர் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் பல வெற்றிகளைக் குவித்தார்.

1964 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உதைபந்தாட்டக் கழகத்துக்காக விளையாடுவதறகாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அகில இலங்கை ரீதியிலான கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்றார். அவரது அணி அரையிறுதி ஆட்டம்வரை சென்றது. உதைபந்தோடு மகாலிங்கம் வலைபந்தாட்டத்திலும் சிறந்த ஈடுபாடு கொண்ட விளையாட்டு வீரராகத் திகழ்ந்துள்ளார்.

கல்லூரிக் காலம் முடித்து 1964 ஆம் ஆண்டு இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு நியமனம் பெற்ற மகாலிங்கம் களுத்துறையில் தனது உதவிப் பொலிஸ் பரசோதகர் பயிற்சியினை முடித்து இரத்தினபுரியில் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

பின்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் மருதானை பொலிஸ் நிலையத்திலும் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றினார். பொலிஸ் துறையிலும் தனது விளையாட்டு ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் அவர் சற்றும் குறைத்துக்கொள்ளவில்லை. பொலிஸ் துறையில் உடற்பயிற்சி விளையாட்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் பொலிஸ் திணைக்களங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றார். 1965, 1966 ஆம் ஆண்டுகளில் அரசினர் சேவைளாயர் போட்டிகளில் பங்கேற்ற அவர் நீளம்பாய்தல் மற்றும் உயரம்பாய்தலில் முதல்நிலை வீரராக வெற்றிபெற்றார்.

குறித்த இரு வருடங்களிலு்ம சிறந்த விளையாட்டு வீரராகத் தெரிவுசெய்யப்பட்ட அவர் “ஒஸ்மன் டீ சில்வா வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டார். பொலிஸ் விளையாட்டுப் போட்டிகளில் நீளம் பாய்தல் மற்றும் உயரம்பாய்தலின் சாதனைக்குச் சொந்தக்காரரும் இவராகவே திகழ்க்கின்றார்.

இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளில் இவர் விளையாடும் அணியே வெற்றிக்கனியைப் பறித்தது.

கல்லூரிக் காலத்திலும் சரி பொலிஸ் துறையில் இணைந்தபோதும் சரி விளையாட்டோடு மட்டும் நின்றுவிட்டாது சிறந்த ஒழுக்கமுள்ளவராக தன்னை உயர்த்திக்கொண்ட மகாலிங்கத்தின் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்தில் முடிந்துபோய்விடும் என எவரும் எண்ணியிருந்திருக்கவில்ல. அந்தத் துர்ப்பாக்கிய சம்பவம் 1966 ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தது. 1966 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மூன்றாம் திகதி வியாழக்கிழமை அதிகாலை கொழும்பில் வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த அவரது உயிர் திடீரென ஏற்பட்ட விபத்தொன்றில் பறிக்கப்பட்டுவிட்டது.

அச் செய்திகேட்டு இலங்கையின் விளையாட்டுத்துறை மட்டுமன்றி மத்தியின் மைந்தர்களும் துடிதுடித்துப்போனார்கள். தங்களின் தலைவனாய் மத்தியின் விளையாட்டுத்துறையின் வழிகாட்டியாய் திகழ்ந்த ஒரு அண்ணனை இழந்த கோகத்தில் மத்தியின் மைந்தர்களும் வியாட்டுத்துறையினர் ஒரு நண்பனை இழந்த சோகத்திலும் துயருற்றனர்.

விளையாட்டுத் துறையின் தொடர் சாதனையாளர்களாக பத்திரிகைகளில் அடிக்கடி இடம் பெறும் மகாலிங்கம் இதனால் ஊடகத்துறை நண்பர்களுடனும் நெருங்கிய உறவினைக் கொண்டவராக திகழ்ந்தார். மகாலிங்கத்தின் மரணம் அறிந்த பத்திரிகை நண்பர்கள் ஒருகணம் திகைத்துநின்றனர். மகாலிங்கத்தின் சாதனைகளில் எழுதிய அவர்களது கரங்கள் அவரது மரணச் செய்தியை எழுதமுடியாது தவித்தன. மறுநாள் பத்திரிகைகள் யாவும் மகாலிங்கத்துக்கு இறுதி அஞ்சலியோடு புகழஞ்சலி செலுத்தின.

இவ்வாறு சகாப்தம் தாண்டிய விளையாட்டு வீரன் , வி.ரி மகாலிங்கம் ஞாபகார்த்தமான “வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக் 20 – 20 துடுப்பாட்டத்தொடர் 2017 ஆம்ஆண்டு முதல் நடைபெறவுள்ளது.

யாழ்மாவட்ட கிரிக்கெட் சங்கம் வி.ரி.மகாலிங்கத்தின் குடும்பத்தினரான அவரது சகோதரர் வி.ரி.சிவலிங்கத்தின் அனுசரணையுடன் இந்த கிரிக்கெட் சுற்றுத்தொடரை இந்த ஆண்டுமுதல் நடத்த தீர்மனித்துள்ளன.

வி.ரி.சிவலிங்கம் இலங்கையின் சிரேஷ் சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்கின்றார். அவரது முழுமையான நிதிப்பங்களிப்புடன் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 24 கழகங்கள் பங்கேற்ற “வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக் T20 கிரிக்கெற் சுற்றுப்போட்டியில்” இறுதியாட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணியும் தெரிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் மாலை நடைபெறவுள்ளது.

இன்றைய இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் கலந்து கொள்ளவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More