இலங்கை சென்றுள்ள ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீவ் (Pablo De Greiff) வுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்குடையில் நேற்றையதினம் சந்திபபொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணி விடுவிப்பு, காணாமல்ஆக்கப்பட்டோர், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசேட அறிக்கையாளரின் கவனத்திற்கு இரா. சம்பந்தன் கொண்டுவந்துள்ளார்.
காணிவிடுவிப்பு தொடர்பில் மக்கள் சில பிரதேசங்களில் கடந்த 300 நாட்களுக்கும் அதிகமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஒருதாய் தனது மகனை படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ கையளித்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது. அந்த உரிமையை மறுக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயலாக்கம் தொடர்பில் காணப்படும் தாமதம் குறித்து தெளிவுபடுத்திய சம்பந்தன் இந்த அலுவலகம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நிறுவப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் கைதிகள் தொடர்பில் பேசிய சம்பந்தன் இவர்கள் களவு செய்த காரணத்தினாலோ அல்லது தமது நன்மைக்காக சூறையாடிய காரணத்தினாலோ காவலில் இருக்கவில்லை. இந்த ஒவ்வொருவரினதும் வழக்குகள் அரசியல் பரிணாமத்தினை கொண்டுள்ளது. ஆகவே இவை அந்த அடிப்படையில் நோக்கப்பட்டு முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தனது பயணத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கவுள்ளதாக கூறிய விசேட அறிக்கையாளர் இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனை வலியுறுத்தினார்