சமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டதென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சமஷ்டி என்பதற்கு, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தனது கொழும்பு நண்பர்களுக்கு, சமஷ்டியின் நன்மை பற்றித் தெரியும் எனவும் அவர்களை தான் சமாளித்துக் கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உண்மையான சமஷ்டி வழங்கப்பட்டால் அதன் மூலம் இந்த நாடு, செழிப்பினை நோக்கிச் செல்லும் எனத் தெரிவித்த அவர் இதன்மூலம் பல்வேறு இனங்களுக்கு இடையிலான வெறுப்பும் சந்தேகமும் மறைந்து நல்லிணக்கமும் சமாதானமும் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளர்h.
வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி வழஙகப்படுவதனை பெரும்பான்மையின மக்கள் இழப்பாக கருதுவார்களாயின் முழு நாட்டுக்கும் சமஷ்டியை வழங்கி ஒவ்வொரு மாகாணத்தினையும் இன்னொரு மாகாணத்துடன் இணைகின்ற உரிமை உட்பட சமஷ்டி உரிமைகளை வழங்குவதற்குப் பரிந்துரைத்துப் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தின் ஜெனிவாவுக்கு செல்லும் போதெல்லாம், சிறுபான்மையினரைப் பலப்படுத்துவதும் அவர்களுக்கு விசேட சலுகைகளையும் வழங்குவதும் தமது பொறுப்பாகும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம், இலங்கைக்கு வந்தால், அரசியல் நலனுக்காக, சிறுபான்மையினர் மீது பாகுபாடு காட்டுவதே தமது கடமை போன்று, பெரும்பான்மையான சட்டவாக்கப் பிரிவினர் நடந்து கொள்கின்றனர் என, அவர் குற்றஞ்சாட்டினார்.