குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
சிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக விமானப்படைத் தளபதி கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையில் பல்வேறு மாற்றங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். விமானப்படையின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பொருத்தமான தரமான விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது விமானப் படைக்குச் சொந்தமான சில விமானங்கள் ஆயுட் காலத்தை கடந்து விட்டதாகவும் அவை பதிலீடு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில விமானங்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவை பழுதுபார்க்கப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடத்தல்களை தடுப்பதற்கு கடற்படையினருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளையே நம்பியிருக்காது சிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.