இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவையில் குற்றவியல் சட்டத்தில் அவசர திருத்தம் கொண்டு வரும் முயற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு காரணமாகவே இவ்வாறு குறித்த பிரேரணை தொடர்பான சபை ஒத்தி வைக்கப்பட்டது.
தமது மாநிலத்தின் குற்றவியல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை ஏற்படுத்தி புதிய சட்டம் ஒன்றை உருவாக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகும் அரசு ஊழியர்களைக் பாதுகாக்கும் வகையில் ராஜஸ்தான் அரசு அவசரச் சட்டம் கொண்டுவருவதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சட்டப் பிரேரணை, இன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் இன்றைய நாள் முழுவதற்குமானசபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.