குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடாத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை பெற்ற கோமகன் கலந்து கொண்டார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் , கோமகன் வெள்ளைக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ,
யாழ்ப்பாணத்திற்கு கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி வருகை தந்த போது கறுப்புக்கொடி ஏந்தி போராடி இருந்தோம். அது தொடர்பில் ஜனாதிபதி யாழில் உரையாற்றும் போது , எனக்கு எதிராக கறுப்புக்கொடி உயர்த்தாதீர்கள் வெள்ளைகொடியை உயர்த்துங்கள் . கறுப்புக்கொடியை உயர்த்தி என்னை பலவீனப்படுத்தினால் , பேய்கள் பலம் பெற்று விடும் என உரையாற்றி இருந்தார்.
அதனால் அவர் கோரியது போல இன்று நாம் வெள்ளைகொடி ஏந்தி போராடுகின்றோம். அதேபோல ஜனாதிபதியும் எமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.