குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் தேவைப்படுகின்றது என தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் உள்ள அரசியல் சாசனம் நாட்டை பெரும் நெருக்கடியான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதனால், புதிய அரசியல் சாசனம் ஒன்றின் அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் போது பௌத்த மதத்திற்கு உரிய இடத்தை அவ்வாறே வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிறைவேற்று அதிகார முறைமையைக் கொண்ட இந்த அரசியல் சாசனத்தினால் மோசமான அரசியல் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியல் சாசனம் காரணமாக ஊழல் , மோசடிகள் மற்றும் மோசமான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதனால் நாடு மேலும் மேலும் குழப்பங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்வதனை விடவும், அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டியதே அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.