274
மனித உரிமை மீறல்களுக்கு, பொறுப்பு கூறலுக்கான செயற்பாடுகளில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைமைகள் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது இலங்கையின் எதிர்காலம் பற்றிய பாரதூரமான விடயமாக நோக்கப்படுகின்றது.
பொறுப்புக்கூறலின் முக்கிய அம்சமாக நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மோசமான நீண்டகால யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமாறு காலப்பகுதியில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அதன் அடிப்படைக் கருத்தியலாகும்.
யுத்த மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என பரவலாக வலியுறுத்தப்படுகின்றது. பொறுப்பு கூறலை வலியுறுத்தி ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இது முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் போக்கிலிருந்து மாறுபட்ட ஒரு செயற்பாடாகும். முன்னைய அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்த்திருந்தது. குறிப்பாக பொறுப்பு கூறுவதற்காக சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்திருந்தது. அத்துடன், உள்ளக விசாரணைகள் நடத்துவதையும் அது ஏற்கவில்லை.
கால அவகாசம் கிடைத்தது காரியங்கள் நடைபெறவில்லை
ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை நிறைவேற்றுவதாக 2015 இல் உறுதியளித்திருந்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், ஒப்புக்கொண்டவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மந்த கதியிலேயே செயற்பட்டிருந்தது. அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்ததுடன், பொறுப்பு கூறலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றியடைந்திருக்கின்றது.
இந்த கால அவகாசம் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றத்தையோ அல்லது அதற்கான அக்கறையுடனான செல்நெறி போக்கையோ காண முடியவில்லை. இத்தகைய பின்னணியிலேயே ஐநா மன்றத்தின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ், பொறுப்பு கூறும் விடயத்தை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்தாவிட்டால், அது கைநழுவி போகக் கூடிய ஆபத்தான நிலைமை காணப்படுவதாக் எச்சரிக்கை செய்திருக்கின்றார்.
பிரேசில் நாட்டில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை அவர் தனது எச்சரிக்கைக்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உள்நாட்டில் பொறுப்பு கூறப்படாவிட்டால், வெளிநாட்டில் பொறுப்பு கூறலைக் கோர முடியும் என பப்லோ டி கிரிவ் கூறியிருக்கின்றார்.
உள்நாட்டில் பொறுப்பு கூறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது என்பது கள யதார்த்தம். இருப்பினும் இந்த விடயத்தில் நியாயமாக ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களைக் கடந்து அரசியல் செல்வாக்கே மேலோங்கியிருக்கி;ன்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. அரசாங்கமும் அரசியல் நலன் சார்ந்த காரணங்களுக்காகவே பொறுப்பு கூறும் விடயங்களில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது ஆய்வாளர்களினதும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களினதும் ஒரு முகமான கருத்தாகும்.
போர்க்குற்றங்கள்
முன்னாள் இராணுவத் தளபதியும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது முக்கிய பங்கேற்றிருந்தவருமான ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென்னமெரிக்க பிராந்திய நாடுகளில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்குகள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில், அவர்களின் முக்கிய அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்களை போர்க்குற்றச் செயல்களாகக் குறிப்பிடுவதற்கு தயக்கம் காட்டியிருந்தார்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய டெலோ அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வன்னி யுத்த மோதல்களில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருந்தது என உரத்துக் கூறியிருந்த போதிலும், அதனை அவர்கள் ஏற்பதற்குத் தயாராக இருக்கவில்லை. எழுந்தமானமாக போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியாது. அதற்கு உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டிருந்தார்கள்.
இறுதி யுத்தத்தின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்படவில்லை. மனிதநேயத்திற்கு மாறான வகையில் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. பல அட்டூழியங்கள் செய்யப்பட்டிருந்தன. இவற்றை நேரடியாகக் கண்டவர்களும், இவற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையிலும், வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த நிலையிலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநியாயங்கள் குறித்து வெளிப்படுத்தியிருந்த போதிலும், தமிழ் மக்களின் அரசியல் தலைமையினால் இந்த பாதிப்புக்கள் போர்க்குற்றச் செயல்களாக முன்வைக்கப்படவில்லை.
நாட்டில் நிலவிய நிச்சயமற்ற அரசியல் சூழலும், இராணுவ மேலாதிக்க சூழலில் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகத்தான், போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக முறையிடுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரத் தயங்கியிருக்கலாம். அந்தத்தயக்கத்திற்கு உண்மையான காரணம் என்னவென்பது வெளியாகவில்லை.
முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்குகள்
ஆனால், ஐரீஜேபி என்ற நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பினர் இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தன என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்ததுடன், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
‘வன்னி பகுதியில் 2007 தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு வரையிலான முக்கிய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களுக்கு அவர்தான் உண்மையில் பொறுப்பாவார்’ என்று நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பின் வழக்கறிஞரான யஸ்மின் சூகா தெரிவித்திருந்தார்.
‘ஐநா அமைப்பு நடத்திய விசாரணையில் பொதுமக்கள் மற்றம் போராளிகளை பிரித்து இனம் காணும் முறையை இலங்கை இராணுவம் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் விகிதாசார கேள்வி தொடர்பிலான சட்டத்தையும் பின்பற்றவில்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இறுதி யுத்தத்தின்போது சிறியதொரு நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருந்தனர். அப்போது விடுதலைப்புலிகள் மீது நடத்துவதாகக் கூறி இராணுவத்தினரால் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
‘மோதலற்ற பிரதேசம் என அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, பாதுகாப்பு தேடி மக்கள் சென்றிருந்தபோது, அந்தப் பிரதேசத்தின் மீது குண்டுத் தாக்குதல்களும், எறிகணை தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இராணுவத்தின் இந்த விசுவாசமற்ற நடத்தை மிகவும் மோசமானது. இதன் காரணமாகவே பெரும் எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று இந்த போர்க்குற்ற வழக்குகள் தொடர்பாக கருத்துரைத்தபோது நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பின் வழக்கறிஞரான யஸ்மின் சூகா கூறியிருயிருந்தார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றிவாகை சூடியதையடுத்து, இராணுவத்தினருக்கு நாட்டில் அனைத்து விடயங்களிலும் முன்னுரிமையும், அதிகூடிய கௌரவமும் அளிக்கப்பட்டிருந்தது. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கும் உயரதிகாரிகளுக்கும் அரசாங்கத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அரசியல் இராஜதந்திரச் செயற்பாடுகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இராணுவ சேவையில் இருந்து 2015 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்த ஜகத் ஜயசூரிய தென்னமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
ஏதேச்சதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து, இராணுவத்திற்கு அதிகூடிய முதலிடம் வழங்கி, ஜனநாயகத்திற்கு சாவுமணி அடித்ததாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்திற்கு மீண்டும் புத்துயிரளிப்பதற்காக புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவர் ஜனாதிபதி பதவியேற்ற சூட்டோடு ஜகத் ஜயசூரிய அந்த வருடம் பெப்ரவரி மாதம் பிரேசில், ஆர்ஜன்டினா, சிலி, கொலம்பியா, பெரு, சுரினம் ஆகிய நாடுகளுக்கு இலங்கைத் தூதுவராக நியமனம் வழங்கப்பட்டது.
குற்றச்சாட்டுக்கள்
ஆனால் ஐரீஜேபி என்ற நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பினர் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் ஆர்ஜன்டினா, பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் அவருக்கு எதிராக போர்க்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்ததாக நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பினர் கூறியிருந்தனர்.
ஒரு நாட்;டின் தூதுவர் என்ற ரீதியில் ஜகத் ஜயசூரிய மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அது பற்றிய விசாரணைகளிலிருந்து விலக்களிக்கப்படுவதற்கும் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கும் சிறப்பான உரிமைகள் இருந்தபோதிலும், அவரை தூதுவர் பணியில் இருந்து நீக்கவும், அவர் மீது விசாரணை நடத்தவும் வேண்டும் என நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் காணாமல் ஆக்கப்படுவதற்கும், பாலியல் வன்முறை உட்பட சித்திரவதை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்த இராணுவ குழுக்களுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார் என இந்த மனித உரிமை அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.
இறுதிக்கட்ட யுத்த மோதல்கள் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னி ஆயுதப்படைகளின் தலைமையகமாகிய ஜொசப் முகாம் என்று அழைக்கப்பட்ட வவுனியா இராணுவ முகாமில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்து அவர் அவற்றை மேற்பார்வை செய்திருந்தார்.
இக்காலப்பகுதியில் இந்த இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படும் 14 பேருடைய வாக்குமூலங்களும், ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக நீதிக்கும் உண்மைக்குமான சர்வதேச அமைப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆயினும் செப்படம்பர் மாதம் ஜகத் ஜயசூரிய உடனடியாகவே நாடு திரும்பியிருந்தார். அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததன் காரணமாகவே அவர் நாடு திரும்பியிருந்தார் என அரசாங்கம் கூறியிருந்தது. அவருக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த போர்க்குற்றச்சாட்டு வழக்குகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அவர் நாடு திரும்பியிருந்தார் என வெளியாகியிருந்த தகவல்களை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
போர்க்குற்றச்சாட்டு அச்சுறுத்தல்
மூன்றாம் உலக நாடுகள் எனப்படுகின்ற வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளின் பட்டியலில் உள்ள இலங்கை சுயதேவைப் பூர்த்தி கொண்ட ஒரு நாடல்ல. அநேகமாக அனைத்து விடயங்களுக்கும் பிற நாடுகளிலேயே அது தங்கியிருக்கின்றது. சிறிய நாடாக இருந்தாலும், செழுமையான நிலம், போதிய அளவிலான நீர்;, சாதகமான கால நிலை போன்ற மனித வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியமான வளங்களை இயற்கை வாரி வழங்கியிருக்கின்றது. ஆயினும் அந்த வளங்கள் அரசுகளினால் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அத்துடன் அந்த வளங்களை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தும் வகையில் அவர்களை வழிகாட்டுவதற்கான வழி முறைகளும் பின்பற்றப்படாத காரணத்தினால், பிறரில் தங்கியிருக்கின்ற நிலைமையிலேயே நாடு சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த மோதல்களின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்;டவர்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கின்ற கத்தியாகவே காணப்படுகின்றது. எந்தவேனையிலும் அது அவர்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்கக் கூடும். அந்த ஆபத்துக்கள் பதவி, அதிகார அந்தஸ்து என்பவற்றைக் கடந்து பாயும் வல்லமை கொண்டதாகவே காணப்படுகின்றது.
முன்னாள் இராணுவத் தளபதியும் வன்னிப் போரின் இறுதிக்கட்டச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமாகிய ஜகத் ஜயசூரிய மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் ஏனையவர்கள் மீது சுமத்தப்படமாட்டாது என்பதற்க எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. ஜகத் ஜயசூரிய மீது பிரேசிலிலும், கொலம்பியாவிலும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தொடரப்பட்டுள்ள வழக்குகள் இதனை உணர்த்தியிருக்கின்றன என்பதே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐநா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் செய்துள்ள எச்சரிக்கையின் அடிப்படைத் தொனியாகும்.
இத்தகைய ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமானால், யுத்த காலத்தில் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கேற்றிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் உள்நாட்டில் நியாயமான ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பப்லோ டி கிரிவ் அறிவுறுத்தியிருக்கி;ன்றார்.
பொறுப்பு கூறும் விடயங்களில், குறிப்பாக நிலைமாறு கால நீதிக்கான செயற்பாடுகள் அரசியலாக்கப்பட்டிருப்பதுவும், நடந்தவைகள் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கி, நடந்து முடிந்துள்ள உரிமை மீறல்கள் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கு உளப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பாடதிருப்பதும் இலங்கையின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கச் செய்யும் என்பதையும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டைத் தப்பர்த்தம் செய்யக் கூடாது
நிலைமாறுகால நீதி என்பது வெறுமனே மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை என்பதை அவர் இடித்துரைத்திருக்கின்றார். அதேநேரம் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதிலும் நீதியை நிலைநாட்டுவதிலும் முன்னேற்றம் காணப்படாத நிலைமையானது, பாதக்கப்பட்டவர்களுக்குரிய நீதி மறுக்கப்படுவதாகும். இது பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பி;க்கை இழப்பதற்கே வழிவகுக்கும் என்பதையும் நீதிக்கான செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட ஓர் இனத்தின் நலன்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்;.
நிலைமாறுகால நீதி என்பது பரந்துபட்ட அளவில் நோக்கப்பட்டு, செயற்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். அது அடிப்படையில் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. அதனை வலுவான அரசியலுக்கும் அரசியல் செயற்பாடுகளுக்குமான விடயமாகக் குறுக்கிவிடக் கூடாது என்பதையும் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் தனது 14 நாள் இலங்கை விஜயத்தின் இறுதியில் வெளியிட்டுள்ள சுருக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் என்பது வரைமுறைகளை மீறிச் செயற்பட்டவர்கள் மீதே சுமத்தப்படுவதாகும். அது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் மீது சுமத்தி, மந்திர வித்தையின் மூலம் அழிப்பதைப் போன்ற செயற்பாட்டைக் கொண்டதல்ல. அது ஓர் இனத்தின் மீது ஒட்டு மொத்தமாகச் சுமத்தப்படுவதுமல்ல. அதேவேளை, மனத உரிமை மீறல்களிலும், யுத்த மீறல்களிலும் ஈடுபட்டவர்களைத் தவிர்ந்த ஏனையோர் மீது நிலைமாறு கால நீதி பாய்வதில்லை. அத்தகைய மீறல்களில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் யுத்த கதாநாயகர்களாகவோ யுத்த வீரர்களாகவோ கணிக்கப்படமாட்டார்கள். ஆகவே, யுத்தத்தில் ஈடுபட்டவர்களை அல்லது யுத்த வீரர்களை நீதிக்கு முன்னால் நிறுத்துவதற்க அனுமதிக்கமாட்டோம் என்று தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்வது நிலைமாறுகால நீதிச்செயற்பாட்டைத் தப்பாக அர்த்தப்படுகின்ற ஒரு நடவடிக்கையாகவே தான் நோக்குவதாக அவர் கூறியுள்ளார்.
பப்லோ டி கிரிவ் குறிப்பிட்டுள்ளதைப் போன்று ஐநா பரிந்துரைகள் சட்டவலு கொண்டவையல்ல. எனவே அவற்றை ஏற்பதும் ஏற்க மறுப்பதுவும் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. ஆனால் மோசமான ஒரு யுத்தத்தின் பின்னர், நீண்ட யுத்த அழிவுகளுக்குப் பின்னர், உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கி மீள் நிகழாமையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்க வேண்டியது இறைமையுள்ள ஓர் அரசாங்கத்தின் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும். இதனை கவனத்திற்கொண்டு நாட்டினதும், நாட்டு மக்களினரும் எதிர்கால நன்மைகளுக்காக இந்தப் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
Spread the love