சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் அவர்கள் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வர வேண்டும் என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் ஆட்சி புரியலாம் எனவும் . ஆனால் நாட்டை பிரிக்க அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்ட அவர் யாராக இருந்தாலும் வாக்குப்பலத்தின் மூலம் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவியேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தமிழ் தலைவர் ஒருவரோ அல்லது முஸ்லிம் தலைவர் ஒருவரோ நியமிக்கப்படுவதனை தாங்கள் எதிர்க்கவில்லை எனத் தெரிவித்த மெதகொட அபேதிஸ்ஸ தேரர் இந்த நாட்டை பிராந்தியங்களாக பிரித்து நாசமாக்குவதே தமக்கு பிரச்சினையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது சிங்கள மக்களுடன் ஏனைய சமூகத்தவரும் இணைந்தே பாடுபட்டனர் எனத் தெரிவித்த அவர் இந்த நாட்டில் சிங்களவர் என இல்லாத காரணத்தால் எவராவது ஒரு நபருக்கு சிங்களவர்கள் அனுபவிக்கும் எந்தவொரு வரப்பிரசாங்களாவது கிடைக்காதிருந்தால் அதனை அவர்களுக்கு வழங்க தாங்கள் தயார் எனவும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.