குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கொலையாளிகள் புதிய அரசியல் சாசனத்தை எதிர்க்கின்றார்கள் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென 63 லட்சம் மக்கள் 2015ம் ஆண்டு தேர்தலில் ஆதரவளித்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில், புதிய அரசியல் சாசனத்தின் ஆதரவளிக்கும் அனைவரையும் கொன்று விட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு கூறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருத்துக்கள் மூலம் கோதபாயவினால் உருவாக்கப்பட்டுள்ள வியத்மக என்னும் அமைப்பின் மெய்யான நிலை அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உலக நாடுகளின் நம்பிக்கையை வென்றெடுத்து, ஜனநாயக பாதையில் முன்நோக்கி பயணிக்கின்றனர் எனவும் இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாத தரப்பினர் கடும் ஆத்திரம் கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை கொலை செய்ய வேண்டுமென முன்னாள் படையதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகார மோகம் கொண்ட நபர்களின் மலசலகூட வாய்களிலிருந்து கழிவான இனவாத வார்த்தைகளே வெளியேறுகின்றன என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வியத்மக அமைப்பின் இரத்த வெறி இவ்வாறான கருத்துக்கள் மூலம் வெளிச்சமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைவான் கலாச்சாரத்தின் ஸ்தாபகர் கோதபாய ராஜபக்ஸ, நாட்டில் பீதியை ஏற்படுத்த மேற்கொண்டுவந்த முயற்சிகளை இன்னும் கைவிடவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களை இந்த இரத்த வெறி பிடித்த இனவாதிகளினால் தடுத்து நிறுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.