குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இவ்வருடம் வடக்கை மையமாக கொண்டு யாழ் மாவட்டத்தில் நடைபெற இருப்பதுடன் அதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவிருப்பதாக தபால்துறை அஞ்சல் அலுவல்கள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்
யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா தொடர்பாக ஆராயும் விசேட முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது
யாழ் முல்லைத்தீவு மன்னார் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைத்து இந்த தேசிய மீலாத் விழா இவ்வருடம் மார்கழி மாதம் பதினெட்டாம் திகதி யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளநிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்பட்டது
குறிப்பாக வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் முஸ்லிம்களுக்கான போக்குவரத்து சுகாதார ஏற்பாடுகள் குறித்து இங்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதுடன் கலாசார நிகழ்வுகள் தொடர்பிலும் உரையாடி முடிவுகள் எட்டப்பட்டது
யாழ் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதிகள் வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகள் சங்கத்தினர் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் பொலிசார் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்