குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளிலே இரண்டு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் எமது பிரதேசத்தில் பசுமையான சூழலை உருவாக்க முடியும. எனவே ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் இரண்டு மரக்கன்றுகளையாவது நாட்ட வேண்டும் என கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் இன்று (26) இடம்பெற்ற ‘வனறோபா’ தேசிய மரம் நடுகை மாவட்ட மட்ட நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில் முன்னைய காலங்களில் புரட்டாதி ஐப்பசி மாதங்களில் இருந்து தை மாதம் வரையான காலப்பகுதியினை மழைகாலம் அல்லது மாரிகாலம் என்று கூறுவார்கள். ஆனால் இன்று மார்கழி மாதத்தில் மழை வருமா என எண்ணும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமைக்கு காடுகளின் அடர்த்தியின்மை காரணமாகும்.
இந்நிலைமையினை சீரமைப்பதற்காகவே தேசிய ரீதியில் ‘வனறோபா’ மரம் நடுகை திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இத் திட்டத்தின் ஊடாக எழுபத்தையாயிரம் (75000) மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கிளிநொச்சி வனவளத் திணைக்கள அதிகாரிகள். கமநலத்திணைக்கள அதிகாரிகள். வட்டக்கச்சி மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.