‘‘மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் பிரச்சினையில், யதார்த்தமான அணுகுமுறை தேவை’’ என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் ராணுவத்தினர் அடக்குமுறைக்குப் பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்காளதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மியான்மர் முஸ்லிம்கள் பங்காளதேசம் சென்றதால், அந்த நாடு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் திணறுகிறது. இதற்கிடையில், சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளனர்.
அவர்கள் ஜம்முகாஸ்மீர், ஹைதராபாத், ஹரியாணா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் ரோஹிங்கியா முஸ்லிம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘நாட்டு நலன் மற்றும் மனித உரிமை ஆகிய இரண்டுக்கும் பாதிப்பில்லாமல், ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது,
ரோஹிங்கியா முஸ்லிம்களை திரும்பவும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு யோசித்து வருகிறது. அதற்கு கடும் நடவடிக்கைக்கு பதில் யதார்த்தமான அணுகுமுறை அவசியம். ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்கள் அமைப்பில் சேர்த்து கொள்வதற்கு தீவிரவாத அமைப்புகள் முயற்சிக்கலாம். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என ஏற்கெனவே அரசு கூறியுள்ளது.
மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பான கவலையை பங்காளதேச அரசுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலமும் நடைமுறைக்கு உகந்த வகையிலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் நல்ல தீர்வு காணலாம். எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை மாவட்டந்தோறும் அடையாளம் கண்டு அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லா மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.