குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் பிரித்தானியாவிற்குள் கொண்டுவந்துள்ளனர். விசேடமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தியே இவர்கள் ஆட்களை பிரித்தானியாவிற்குள் அழைத்துவந்துள்ளனர்.