வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஜனாதிபதி பதவி வகித்த ஜோன் F கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்திகதி ஒஸ்வோல்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பான அலுவலக ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில் ஜோன் F கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை, வெளியிடத் தகுந்த கோப்புகளாக மாற்றம் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, ஜோன் F கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2891 ரகசியக் கோப்புகளை விடுவிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து அந்தக் கோப்புகளை தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
மீதமுள்ள கோப்புகள் எதிர் வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை செய்து வருகிறது. எனினும் தேசிய பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சில ரகசியக் கோப்புகளை விடுவிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுத்துள்ளார்.
ஜோன் F கென்னடி கொலை தொடர்பான கோப்புகள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என 1992-ல் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி 90 சதவீத ஆவணங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போதும் குறிப்பிட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.