இலங்கையில் முதல் தடவையாக இன்று முதல் இலத்திரனியல் அடையாள அட்டைகள் (Smart Identity Card) வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விவகாரங்கள், வட மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி. நவின்னவின் தலைமையில் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தினால் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த அடையாள அட்டைகளில் 12 இலக்கங்கள் காணப்படுவதுடன், சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தரத்திற்கு அமைவான படம் மற்றும் இயந்திரத்தினால் வாசிக்கக்கூடிய பார்குறியீடு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. பெயர், பிறந்த இடம், முகவரி மற்றும் பாலினம் என்பன மும்மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ள அதேவேளை, அடையாள அட்டைக்கு சொந்தக்காரரின் கையொப்பமும் இந்த அடையாள அட்டைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த இந்த அடையாள அட்டை சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்தில் அமைந்துள்ளதுடன், இதனூடாக பொதுமக்கள் விரைவாகவும் இலகுவாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் இலங்கை ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.