குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
மிகக் குறைந்த அளவிலான மழை வீழ்ச்சியுடன் நெற் பயிர்ச்செய்கையை தொடங்கியிருந்தனர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள். மழைக்காக ஏங்கும் வயல்கள் வரட்சி காரணமாக வாடியபடி காணப்படுகின்றது. எனினும் கடந்த சில நாட்களாக நாளாந்தம் பத்துப் பதினைந்து நிமிடங்கள் குறைந்த மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது.
இது பயிர்களுக்கு போதாமல் காணப்படுவதுடன் பெய்யும் மழைக் காட்டிலும் அடிக்கும் வெயிலும் வெம்மையும் அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்முறை கிளிநொச்சி மாவட்ட நெற் செய்கை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
போதிய மழை கிடைக்கும் என்று நம்பி விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வானத்தைப் பார்த்தபடி இருக்கும் காட்சியையே பார்க்க முடிவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இதன் காரணமாக மாவட்ட விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் நெல் உற்பத்தியும் வீழ்ச்சியை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கண்டாவளை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த பதினொரு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இம்முறை காலபோக நெற் செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.
போரால் பாதிக்கப்பட்ட இந்த மக்களை கடந்த சில வருடங்களாக இயற்கையும் வாட்டி வதைத்து வருகின்றது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி கிடைக்காமல் போவதுடன் அறுவடைக் காலத்தில் ஏற்படும் கடும் மழை வீழ்ச்சி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.