குஜராத்தில் உள்ள டாகோட் மாவட்டத்தில் பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டம் ஒன்றின் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
குஜராததில் கிடகோட்டா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான கணேஷ் கமாரா என்பவரையும் மற்றுமொருவரையும் திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அவர்களை , காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்து உதைத்து விசாரித்ததன் பின்னர் மறுநாள் விடுதலை செய்திருந்தனர்.
எனினும் வெளியே வந்த ஒரு மணி நேரத்தில் கணேஷ் உயிரிழந்ததனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கணேஷின் உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன் வாகனத்துக்கும் தீ வைத்தனர். இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இந்த துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார் எனவும் இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.