169
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கம் கூறி வருகின்றது. அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றும் இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. புலிகள் இல்லாத இன்றைய நாட்களில் குறித்த அறிக்கை தென்னிலங்கை இனவாதிகளுக்கு வெறும் வாயிற்கு மெல்ல அவல் கிடைத்த கதையாகிவிட்டது.
புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் நடாத்திய பகிரங்க கருத்தமர்வுகளில் தமிழ் மக்கநெறளள் தமது அபிலாசைகளை வலியுறுத்தி இருந்தார்கள். வடக்கு கிழக்கு இணைந்த ஈழ மாநிலத்தில் சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்பது முக்கியமான அரசியல் உரிமையாக மக்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும் புதிய அரசியலமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளை புறந்தள்ளியிருப்பதாகவே தோன்றுகிறது.
புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்றும் சமஷ்டி இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனினும் அது தான் புதிய அரசியல் அமைப்பு என்றும் இலங்கை அரசால் சொல்லப்படுகின்றது. இதில் மிகவும் சிரிப்பூட்டும் விடயம் என்னவென்றால் அந்தப் புதிய அரசியலமைப்பை இலங்கை பாராளுமன்றத்தில் வைத்து எரிக்கப்போகின்றேன் என்று விமல் வீரவன்ச கூறியிருப்பதுதான். தமது அரசியலுக்காக எதையும் எரிக்கக்கூடியவர்கள் விமல் வீரவன்சக்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இவ்வாறு முன்னர் கூறிய விமல் வீரவன்ச, புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால், நாடாளுமன்றத்திற்கு குண்டு போடப்போவதாக கூறியுள்ளார். ஒரு நாட்டில் ஜனநாயகத்தை, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் இடமாக பாராளுமன்றம் மதிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை இலங்கைப் பாராளுமன்றம் பாதுகாத்தது. தமிழ் மக்களுக்கு எதிரான போரை புனிதப்படுத்தியது.
இலங்கைப் பாராளுமன்றம் பேரினவாதிகளின் பேரினவாதத்தை நிறுவும் இடமாகவே காணப்படுகின்றது. விமல் வீரவன்சக்கள் கடந்த காலத்தில் இந்தப் பாராளுமன்றத்தில் வைத்து தமிழ் மக்கள்மீது போர் தொடுக்க வேண்டும் என்று சூளுரைத்தார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்திலும் மகிந்த ராஜபக்ச காலத்திலும் மக்கள் விடுதலை முன்னணியினர் போருக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். பயங்கரவாதிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து போரை தொடங்குங்கள் என்று இதே பாராளுமன்றில் முழக்கமிட்டனர்.
இதில் முன்னணியில் விமல் வீரவன்ச காணப்பட்டார். இன்று விடுதலைப் புலிகள் இல்லை. அவர்களுக்கு எதிராக செய்ய யுத்தமும் இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக பேசவும் இயங்கவும் விமல் வீரவன்சக்களுக்கு யுத்தம் தேவைப்படுகின்றது. வடக்கில் என்ன நடந்தாலும் புலிகள் வந்துவிட்டார்கள் யுத்தம் தொடங்கப்போகிறது என்று ராஜபக்சவினர் பிரச்சாரம் செய்கின்றனர். விமல் வீரவன்சவும் அவ்வாறு பிரச்சாரம் செய்கின்ற நபராவார்.
அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவானவர்களை கொலை செய்ய வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி கமால் குணரத்தின கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச அணி ஆதரவாளரான இவர், இப்போதே இவ்வாறு கொலை வெறியுடன் பேசுகிறார் என்றும் போரை எவ்வாறு புரிந்திருப்பார் என்றும் உணர்வதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றம்மீதே குண்டுபோடவேண்டும் என்றும் என்று செல்லும் வீரவன்சக்கள் தமிழ் மக்கள்மீது எப்படி குண்டு போட்டிருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நபர்களை கொலை செய்வதாகவும், நாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதாகவும் கூறுவார்களாயின் அவர்களின் மனோ நிலை பற்றி அளவீடு செய்து கொள்ள முடியும். நாடாளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உறவினர் ஒருவர் மீளவும் நாடாளுமன்றின் மீது தாக்குதல் நடத்துவதாக கூறியிருப்பது பரம்பரை குணவியல்பாகவே கருதப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி கூறியிருக்கிறார். தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத மனநிலையும் இவ்வாறே கட்டிக்காக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பில், தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படவில்லை என்று தமிழ் மக்களினால் சுட்டிக்காட்டப்படும் நிலையில் அதனையே இவ்வாறு எதிர்க்கும் சிங்களப் பேரினவாதிகள், தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கும் நிலையில் இல்லை என்ற உண்மையை இங்கே உணரவேண்டியுள்ளது. அது மாத்திரமல்ல இலங்கையில் மாற்றம் என்ற பெயரில் சிறு அசைவு இடம்பெற்றாலும் தமிழீழம் மலர்ந்துவிட்டது என்று கூறியே அரசியல் செய்வார்கள் என்பதும் உணர்த்தப்படுகின்றது.
இலங்கைத் தீவில் இனப்பிரச்சியையை தொடர்ந்தும் தக்க வைத்து அரசியல் செய்வதே விமல்வீரவங்சக்களின் நோக்கமாகும். தமிழ் மக்களை தொடர்ந்தும் போருக்குள்ளும், நெருக்கடிக்குள்ளும் தள்ளுவதும், அவர்களின்உரிமையை மறுத்து அடிமை கொள்வதும் தான் இவர்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பாராளுமன்றத்தின்மீது குண்டு வீசுவேன் என்று சொல்லக்கூடிய நபர்களின் கைகளில் இருந்து இலங்கைத் தீவை பாதுகாக்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும். இதனைக் குறித்து சிங்கள மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமையை மறுக்கும், தமிழ் மக்களை ஒடுக்கும், தமிழ் மக்களை அழித்தொழிக்க நினைக்கும் சிங்களப் பேரினவாதிகள் அடிப்படையில் சிங்கள மக்களுக்கும் எதிரானவர்கள் என்பதை விமல் வீரவன்சவின் இக் கருத்து உணர்த்துகின்றது. மகிந்த ராஜபக்சவின் கரங்கள் சிங்கள மக்களையும் அடக்கி ஒடுக்கியதைப்போன்றதே இதுவாகும். சிங்கள மக்கள் முதலில் தம்மை பாதுகாக்க வேண்டும். தமது ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். அத்தகையதொரு நிலை வரும்பட்சத்திலேயே இத் தீவில் அமைதியும் சமத்துவமும் உரிமையை பகிரும் சூழ் நிலையும் உருவாகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love